பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இதையடுத்து, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மாநிலத்தின் அடுத்த முதல்வராக விரைவில் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2023-ல் நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வர் பதவியை சித்தராமையாவும், டி.கே. சிவக்குமாரும் தலா இரண்டரை ஆண்டுகள் என சமமாக பிரித்துக்கொள்வது என ஒப்புக்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியானது.
அந்த இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்ததை அடுத்து, டி.கே. சிவக்குமாரின் ஆதரவாளர்கள் அவரை முதல்வராக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடத்துக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார். இதனால், இரு தரப்பினரையும் அழைத்து காங்கிரஸ் தலைமை கடந்த ஆண்டு பேச்சுவார்த்தை நடத்தியது. முதல்வர் பதவியில் இருந்து விலக சித்தராமையா மறுத்துவிட்டதை அடுத்து, இந்த விவகாரம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்த பேச்சுவார்த்தை கடந்த 26-ம் தேதி மீண்டும் தொடங்கியது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ரந்தீப் சுர்ஜேவாலா, காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு சித்தராமையாவிடம் கோரப்பட்டதாகத் தகவல் வெளியானது. முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்த பிறகு, அவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்படுவார் என்றும், கர்நாடக சட்ட மேலவை உறுப்பினராக உள்ள அவரது மகன் யதீந்திரா அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என்றும் சமரச திட்டம் முன்வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, முதல்வர் பதவியில் இருந்து விலக சித்தராமையா ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியானது. பெங்களூருவில் நேற்று சித்தராமையாவைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்.வி. தேஷ்பாண்டே இதனை உறுதிப்படுத்தினார்.
இதன் தொடர்ச்சியாக, பெங்களூருவில் உள்ள தனது அதிகாரப்பூர் இல்லாமான காவரியில் இன்று காலை உணவு சந்திப்புக்கு முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், அமைச்சர்கள் பிரியங்க் கார்கே, கே.ஜே. ஜார்ஜ், எம்.பி. பாட்டீல், ராமலிங்க ரெட்டி, ஹெச்.கே. பாட்டீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மசாலா தோசை, இட்லி, சாம்பார், சட்னி, கேசரிபாத் உள்ளிட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டன. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானதாக இருந்தது. அப்போது, முதல்வர் பதவியில் இருந்து விலக இருப்பதாக சித்தராமையா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து, டி.கே. சிவக்குமாரின் ஆதரவாளர்கள் அவரது இல்லத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதேநேரத்தில், டி.கே.சிவக்குமார், சித்தராமையாவை ஆரத்தழுவி, அவரது கால்களைத் தொட்டு ஆசி வேண்டினார்.
கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் மத்தியப் பிரதேசத்தின் நாக்டாவில் உள்ள தனது இல்லத்துக்கு இன்று காலை சென்றார். இதனால், சித்தராமையா எப்போது ஆளுநரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுப்பார் என்பது இன்னும் உறுதியாகவில்லை.