புதுடெல்லி: மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்ற 15 வாக்குச்சாவடிகளில் மே 2ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவையின் முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 29ம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்ற 15 வாக்குச்சாவடிகளில் மே 2ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் இன்று (மே 1) உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மேற்கு வங்க தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில், மாநில தேர்தல் நிர்வாக அமைப்பிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 15 வாக்குச்சாவடிகளில் 11 வாக்குச்சாவடிகள் மகர்ஹத் பச்சிம் சட்டமன்றத் தொகுதியிலும், நான்கு வாக்குச்சாவடிகள் டைமண்ட் ஹார்பர் தொகுதியிலும் அமைந்துள்ளன.
ஃபால்டா சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவு தொடர்பாக பல்வேறு புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான முடிவு எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு வங்கம், அசாம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தற்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.