இந்தியா

“பலதார மணம் புரிபவர்கள் அரசுப் பணியில் தொடர முடியாது” - அசாம் முதல்வர் அதிரடி

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: அசாமில் பலதார மணம் புரியும் அரசு ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இதற்காக, அசாம் அரசு, சட்டதிருத்தம் கொண்டுவந்துள்ளது.

இதற்காக, பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வா தலைமையிலான அரசு, ‘அசாம் பணி ஒழுங்கு விதிகள் 1964’-இல் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதன்படி, ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்துகொள்ளும் எந்தவொரு அரசு ஊழியரும் பணியிலிருந்து நீக்கப்படுவார்.

மேலும், அவர்கள் எதிர்காலத்தில் அரசுப் பணிகளில் சேருவதற்கும் தடை விதிக்கப்படும். இந்த ஒழுங்கு விதியின் 7-ஆவது பிரிவில், புதிய உட்பிரிவு (6) சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த விதியின்படி, முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது, அரசு ஊழியர் மற்றொரு திருமணம் செய்துகொள்ளக் கூடாது. மேலும், அவர் மாநில அரசின் எந்தவொரு நலத்திட்டங்களுக்கும் தகுதியற்றவர் ஆவார்.

இந்த விதி இந்து, முஸ்லிம், சீக்கியர் அல்லது கிறிஸ்தவர் என அனைத்து மதத்தினருக்கும் சமமாகப் பொருந்தும் என்று முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த முன்மொழிவு, கடந்த ஜூலை மாதம் அசாம் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது அறிவிக்கப்பட்டது. பெண்களுக்கு அதிகாரமளிக்கும் மற்றும் பாலின நீதியை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT