குவாஹாட்டி: அசாம் மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறை தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளின் சட்ட ரீதியான நடைமுறைகள் முடிவடைந்து, நீதிமன்றத்தின் முறையான அனுமதி பெற்றதைத் தொடர்ந்து, அவற்றை அதிகாரப்பூர்வமாக அழிப்பதற்கான மாநில அளவிலான சிறப்பு நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.
குவாஹாட்டி புறநகர்ப் பகுதியில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட போதைப் பொருள் ஒழிப்பு நிகழ்ச்சியில், முதல்வர் ஹிமந்த விஸ்வசர்மா, அமைச்சர்கள் ஜெயந்த மல்லா பருவா, நாராயண் தேகா மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது, பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் மூட்டைகளின் மீது முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மாவே நேரடியாக ‘ரோடு ரோலர்’ எந்திரத்தை ஓட்டி அவற்றைச் சிதைத்து அழித்தார்.
இது தொடர்பான வீடியோவை அவர் தனது சமூக ஊடகப் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். மத்திய அரசு வழங்கிய அதி வெப்ப எரி உலை மூலம், சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத அறிவியல் பூர்வமான முறையில் ரூ.472.51 மதிப்புள்ள போதைப் பொருட்கள் அழிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.