பிரதமர் மோடி | கோப்புப்படம் 
இந்தியா

“காலத்தால் அழியாத பிரகாசம் கொண்டது ஆஷா போஸ்லேவின் குரல்” - பிரதமர் மோடி இரங்கல்

வெற்றி மயிலோன்

புது டெல்லி: “ஆஷா போஸ்லேவின் தனித்துவமான இசைப் பயணம் நமது கலாச்சார பாரம்பரியத்தை வளப்படுத்தியதுடன், உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற மக்களின் இதயங்களைத் தொட்டது. மனதை வருடும் மெல்லிசைகள் முதல் எழுச்சியூட்டும் பாடல்கள் வரை, அவரது குரல் காலத்தால் அழியாத ஒரு பிரகாசத்தைக் கொண்டிருந்தது’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானார். அவருக்கு வயது 92. மும்பையில் உள்ள கேண்டி மருத்துவமனையில் சனிக்கிழமை மாலை உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று அவர் காலமானார். உடலின் பல்வேறு உறுப்புகள் செயலிழந்த காரணத்தால் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

          

ஆஷா போஸ்லேவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் பன்முகக் குரல் வளமை கொண்ட ஆஷா போஸ்லேவின் மறைவால் நான் ஆழ்ந்த வருத்தம் அடைகிறேன். பல தசாப்தங்களாக நீடித்த அவரது தனித்துவமான இசைப் பயணம் நமது கலாச்சார பாரம்பரியத்தை வளப்படுத்தியதுடன், உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற மக்களின் இதயங்களைத் தொட்டது. மனதை வருடும் மெல்லிசைகள் முதல் எழுச்சியூட்டும் பாடல்கள் வரை, அவரது குரல் காலத்தால் அழியாத ஒரு பிரகாசத்தைக் கொண்டிருந்தது.

ஆஷா போஸ்லேவுடனான எனது உரையாடல்களின் நினைவுகளை நான் என்றென்றும் போற்றுவேன். அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் இசை ஆர்வலர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவர் வருங்கால சந்ததியினருக்கு தொடர்ந்து உத்வேகம் அளிப்பார். அவரது பாடல்கள் மக்களின் வாழ்வில் என்றென்றும் எதிரொலிக்கும்" என்று குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT