இந்தியா

‘எத்தனால் கலந்த, கலக்காத பெட்ரோலை தேர்வு செய்யும் வசதியை மக்களுக்கு வழங்குக’ - பிரதமருக்கு கேஜ்ரிவால் கடிதம்

மோகன் கணபதி

புதுடெல்லி: எத்தனால் கலந்த பெட்ரோல் மற்றும் கலக்காத பெட்ரோல் ஆகியவற்றில் எது வேண்டுமோ அதை தேர்வு செய்வதற்கான வசதி நுகர்வோருக்கு வழங்கப்பட வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “E20 எரிபொருளுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்படாத வாகனங்களில் E20 பெட்ரோலை பயன்படுத்த கட்டாயப்படுத்துவது குறித்து மக்களிடையே பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மக்களின் நியாயமான கவலைகளுக்குச் செவி சாய்ப்பதற்குப் பதிலாக போராட்டக்காரர்களை தேசவிரோதிகள் என்றும் வேலையற்ற சமூக ஆர்வலர்கள் என்றும் அமைச்சர்கள் விமர்சித்து வருகின்றனர்.

அரசின் இந்த முடிவை நியாயப்படுத்தும் வகையில் எந்தவொரு தர்க்க ரீதியான, அறிவியல் பூர்வமான, பொறியியல் அல்லது பொருளாதார ரீதியிலான வாதமும் இல்லை. பரந்த பொது நலனை கருத்தில் கொள்ளாமல், சுயநலம் கொண்ட சிலரின் தூண்டலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று மக்கள் சந்தேகிக்கின்றனர்.

2023-க்கு முன் தயாரிக்கப்பட்ட, அதாவது E20 பயன்பாட்டுக்கு ஏற்றதாக இல்லாத சுமார் 30 கோடி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த வாகனங்களின் உரிமையாளர் கையேடுகளில், தூய பெட்ரோல் அல்லது சில சந்தர்ப்பங்களில் E10 பெட்ரோலை மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. E20-ஐ பயன்படுத்த ஒருபோதும் பரிந்துரைக்கப்படவில்லை.

எரிபொருள் மைலேஜ் குறைவு, வாகன பாகங்கள் விரைவாக தேய்மானமடைவது, இன்ஜின் மற்றும் எரிபொருள் அமைப்பின் முக்கிய பாகங்கள் சேதமடைவது போன்ற பாதிப்புகளை வாகன உரிமையாளர்கள் சந்தித்து வருகின்றனர்.

நான் சில பெட்ரோல் நிலையங்கள் மற்றும் வாகன பராமரிப்பு மையங்களுக்குச் சென்று மக்கள் சந்திக்கும் இந்த பெரிய சிரமங்களை நேரில் கண்டேன். சமூக ஊடகங்களிலும் இத்தகைய அதிருப்தி பரவலாக வெளிப்படுகிறது.

எனவே, எத்தனால் கலந்த E20 பெட்ரோல், கலக்காத தூய பெட்ரோல் ஆகியவற்றில் எது வேண்டுமோ அதை தேர்வு செய்யும் வசதி நுகர்வோருக்கு வழங்கப்பட வேண்டும். இதன்மூலம், E20-க்கு ஏற்றதாக இல்லாத வாகனங்களின் உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களைச் சேதப்படுத்தும் எரிபொருளை பயன்படுத்த கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள்.

E20 எரிபொருளின் குறைந்தகலோரி மதிப்பு மற்றும் அதனால் கிடைக்கும் குறைவான மைலேஜ் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அதன் விலையைக் குறைக்க வேண்டும். இதன் காரணமாக, தரம் குறைந்த அல்லது குறைபாடுகள் கொண்ட ஒரு பொருளுக்கு மக்கள் முழு விலையைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படாது.

இந்த விவகாரம் குறித்து விரிவாக நேரில் விளக்க உங்களைச் சந்திக்க விரும்புகிறேன். உங்களுக்கு வசதியான நேரத்தில் உங்களைச் சந்திக்க அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT