‘அடுத்த உலகப் போர் நீருக்கானது’ என்ற கூற்றை மீண்டும் நினைவுகூரும் வகையில், ஆசியாவின் இரு வல்லரசுகளான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதல் களமாக இன்று பிரம்மபுத்திரா நதி மாறியுள்ளது.
திபெத்தின் இமயமலைப் பகுதியில் கோடிக்கணக்கான டாலர்கள் மதிப்பில் சீனா கட்டத் திட்டமிட்டுள்ள 60,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட மேடோக் (Medog) மெகா அணையானது, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் நீர் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
இதற்குப் பதிலடி தரும் வகையிலும், இந்தியாவின் நதி உரிமையைப் பாதுகாக்கவும், ‘வாட்டர் பஃபர்’ (Water Buffer) ஒன்றை உருவாக்கவும் அருணாச்சலப் பிரதேசத்தின் சாங் (Siang) நதியின் குறுக்கே 11,200 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ஓர் அணையைக் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஆனால், மத்திய அரசின் இந்த அணைத் திட்டத்துக்கு எதிராக அருணாச்சலப் பிரதேச மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தையும் மண்ணையும் காக்க தீவிரமான போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
சாங் நதி என்பது அங்குள்ள ‘ஆடி’ (Adi) பழங்குடியின மக்களுக்கு ஆன்மிகம், பண்பாடு மற்றும் பல தலைமுறைகளின் அடையாளமாகும். மத்திய அரசின் ‘சாங் மேல்நிலைத் திட்டம்’ (SUMP) காரணமாக தங்களின் பூர்வீகக் கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக அம்மக்கள் அஞ்சுகிறார்கள்.
பாரம்பரிய ‘கெபாங்’ (Kebang) அமைப்பின் வழிகாட்டுதலில் ஜென்ஸீ இளைஞர்கள் முன்னெடுக்கும் இந்தப் போராட்டம், வளர்ச்சிக்கும் மக்களின் அடிப்படை உரிமைக்கும் இடையிலான கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது.
இமயமலைச் சூழலியல் என்பது புவியியல் ரீதியாக மிகவும் தீவிரமான மற்றும் ஆபத்தான ‘நிலநடுக்க மண்டலம் 5’-ல் அமைந்துள்ளது. இந்தப் பகுதி எந்தவொரு பெரிய உள்கட்டமைப்பு மாற்றத்தையும் தாங்கும் வலிமை இல்லாதது. சீனா 60,000 மெகாவாட் அணையைக் கட்டுவதும், அதற்குப் போட்டியாக இந்தியா பல்லாயிரம் கோடியில் மெகா அணையைக் கட்டத் திட்டமிடுவதும் இயற்கை பேரழிவுக்கு இட்டுச் செல்லும் என சூழலியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.
மத்திய அரசு அணை கட்ட காரணம்:
சாங் நதியானது திபெத்தில் உருவாகி, அருணாச்சலப் பிரதேசம் வழியாக அசாமில் பாய்ந்து, பிரம்மபுத்திராவாக உருமாறி வங்கதேசத்தில் கடலில் கலக்கிறது. பிரம்மபுத்திராவின் தொடக்கப் பகுதி சீனக் கட்டுப்பாட்டில் இருப்பதால், ஆற்று நீரின் போக்கைக் கட்டுப்படுத்தும் இயற்கையான சாதகநிலை அந்நாட்டிடமே உள்ளது.
இதற்கிடையே சீனா - இந்தியா இடையே முறையான நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் எதுவும் இல்லை. மேலிருந்து சீனா திடீரென அதிகளவு தண்ணீரைத் திறந்துவிட்டால் இந்தியாவில் பெருவெள்ளமும், தண்ணீரைத் திருப்பிவிட்டால் வடகிழக்கு இந்தியாவில் கடுமையான நீர் தட்டுப்பாடும் ஏற்படும்.
சீனா வெளியிடும் அதிகப்படியான நீரைத் தேக்கி வைத்துப் பெருவெள்ளத்தைத் தடுக்கவும், வறட்சி காலத்தில் நீரின் அளவைச் சீராக பராமரிக்கவும் ஒரு ‘வாட்டர் பஃபர்’ இந்தியாவுக்குத் தேவைப்படுகிறது. அதற்காகவே 11,200 மெகாவாட் அணையைக் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சர்வதேச சட்டங்களின்படி, ஒரு நதியின் நீரை எந்த நாடு முதலில் பெரிய அளவில் பயன்படுத்துகிறதோ, அந்த நாட்டுக்கே அந்த நதி நீர் உரிமையில் முன்னுரிமை உண்டு (First User Principle). சீனா தன் அணையை நிறைவு செய்வதற்குள், அருணாச்சலப் பிரதேசத்தில் அணை கட்டி நீரைப் பயன்படுத்தத் தொடங்கினால் மட்டுமே சர்வதேச அளவில் உரிமையை இந்தியா கோர முடியும்.
அணையால் வரும் பலன்
சியாங் அணையால், பிரம்மபுத்திரா நதி நீர் ஓட்டத்தை ஒழுங்குபடுத்தவும், வெள்ள மேலாண்மை செய்யவும், நாட்டின் நீர் பாதுகாப்பை வலுப்படுத்தவும் முடியும். மேலும், 11,000 மெகாவாட் அளவுக்கும் அதிகமான மின் உற்பத்தி, வடகிழக்கு, கிழக்கு மாநிலங்களின் மின் பற்றாக்குறையை தீர்க்கலாம். வேலை, பொருளாதார வாய்ப்புகளும் உருவாகும் என்பது மத்திய அரசின் பார்வை.
இளைஞர்கள் போராட்டம் ஏன்?
இந்தப் பகுதியில் வசிக்கும் ‘ஆடி’ பழங்குடியின மக்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள், மத்திய அரசின் இந்த அணைத் திட்டத்துக்கு எதிராகத் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசு மிகப் பெரிய அணை கட்டினால், அருணாச்சலப் பிரதேசத்தின் சாங் பள்ளத்தாக்கில் உள்ள சுமார் 27 பழங்குடியின கிராமங்கள் முழுமையாக நீரில் மூழ்கும் என்று அந்த மக்கள் அஞ்சுகின்றனர்.
தங்களின் பூர்வீக நிலங்கள், விவசாயப் பகுதிகள் மற்றும் கலாச்சார அடையாளங்கள் அழியும் அபாயம் உள்ளதாகக் கருதியே இளைஞர்களும் மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
‘கெபாங்’ என்பது ஆடி பழங்குடியினரின் பல நூற்றாண்டுகள் பழமையான, ஜனநாயக ரீதியிலான பாரம்பரிய கிராம நிர்வாக மற்றும் நீதிமன்ற அமைப்பாகும். இதில் கிராம மூத்தவர்கள், தலைவர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்றுகூடி விவாதித்து முடிவெடுப்பார்கள். அணை தொடர்பாக மத்திய / மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தினாலும், ‘ஆடி பன்னே கெபாங்’ (Adi Banne Kebang) போன்ற அமைப்புகள் அணைக் கட்டும் திட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதால், ஒட்டுமொத்த சமூகமும் போராட்டப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது.
மாநில அரசின் நிலைப்பாடு:
அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு, “அணை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. சாத்தியக்கூறு ஆய்வு மட்டுமே நடத்தப்படுகிறது. மக்களின் ஒப்புதல் பெறாமல் அணை கட்டப்படாது” எனக் கூறியுள்ளார்.
இமயமலை ஆபத்துகள்
இமயமலை பகுதி புவியியல் ரீதியாக ‘நிலநடுக்க மண்டலம் 5’-ல் அமைந்துள்ளது. இங்கு அதிகளவு நிலநடுக்கம், நிலச்சரிவு, மண் அரிப்பு மற்றும் பனிமலை உருகுதல் ஏற்பட வாய்ப்புள்ளதால், பெரிய அளவிலான கட்டுமானங்கள், அணைகள் கட்டுவது மற்றும் பாறைகளை உடைப்பது போன்ற செயல்கள் ஆபத்தானது எனச் சூழலியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
அணையில் லட்சக்கணக்கான கனஅடி நீரைத் தேக்கும்போது ஏற்படும் அழுத்தம் நிலநடுக்கத்தைத் தூண்டக்கூடும். நிலநடுக்கத்தாலோ அல்லது நிலச்சரிவாலோ அணை உடைந்தால், கீழ்ப்பகுதியில் உள்ள பாசிஹட் நகரம் மற்றும் அசாம் மாநிலத்தின் பெரும்பகுதிகள் அழியும் பேராபத்து உள்ளது.
சீனாவின் நீர் அச்சுறுத்தலைச் சமாளிக்க இந்தியாவின் தேசப் பாதுகாப்பு முக்கியம் என்று மத்திய அரசு கருதும் அதேவேளையில், “எங்கள் தாய் நிலமும் சூழலியலும்தான் எங்களுக்கு முக்கியம்” என அருணாச்சலப் பிரதேச இளைஞர்கள் போராடி வருகின்றனர்.