லே (லடாக்): லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே மாவட்டத்தில், உலகின் மிக உயரமான பகுதி ஒன்றில் இருந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கிய ராணுவ போர் பாராசூட் அமைப்பு நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
கடல் மட்டத்திலிருந்து 22,000 அடி உயரத்தில், மைனஸ் 15 டிகிரி செல்சியஸ் கடும் குளிரில் டிஆர்டிஓ தயாரித்த ராணுவ பாராசூட் செயல்பாடு குறித்து சோதனை நடத்தப்பட்டது. ஏடிஆர்டிஇ அமைப்பின் தலைமைச் சோதனையாளர் விங் கமாண்டர் ராகுல்ஜா, முதன்மை வாரண்ட் அதிகாரிகள் ஆர்.ஜே.சிங் மற்றும் விவேக் திவாரி ஆகிய மூவர் இந்தச் சாகச பாராசூட் குதிப்பைச் செய்து காட்டினர்.
இதுகுறித்து டிஆர்டிஓ அமைப்பு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “லடாக்கில் உள்ள நியோமா, மூத் பகுதியில் இச்சோதனை நடைபெற்றது.
22,000 அடி உயரத்தில் இருந்து குதித்த சோதனைக் குழுவினர், இந்த ராணுவப் போர் பாராசூட் அமைப்புடன், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பாரா கம்ப்யூட்டர், ஆக்சிஜன் அமைப்பு மற்றும் சிறப்பு உடைகள் உள்ளிட்ட அனைத்துத் துணை அமைப்புகளையும் வெற்றிகரமாகப் பயன்படுத்தினர்.
20,000 அடி உயரத்தில் பாராசூட் திறக்கப்பட்டு, கடல் மட்டத்திலிருந்து 13,700 அடி உயரத்தில் குழுவினர் பாதுகாப்பாகத் தரையிறங்கினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகக் கடுமையான ஆர்டிக் காலநிலை நிலவும் உயரமான மலைப் பகுதிகளில், இந்த பாராசூட் அமைப்பின் செயல்திறன், நம்பகத்தன்மை மற்றும் ராணுவப் பயன்பாட்டுத்தகுதி ஆகியவை இச்சோதனை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள டிஆர்டிஓ, இது பாதுகாப்புத் தொழில் நுட்பத்தில் சுயசார்பு இலக்கை மேலும் வலுப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.