கோப்புப்படம்

 
இந்தியா

மும்பையில் ரூ.53,928 கோடி சுரங்கச் சாலை அமைக்க ஒப்புதல்

செய்திப்பிரிவு

மும்பை: மும்பையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, பாந்த்ரா-வொர்லி கடல் பாலம், பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ், தாராவி மற்றும் சர்வதேச விமான நிலையத்தை இணைக்கும் பிரம்மாண்ட சுரங்கச் சாலைத் திட்டத்துக்கு மகாராஷ்டிர அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

மும்பை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் இத்திட்டம் ரூ.53,928 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இரு வழித்தடங்களிலும் தலா 30.87 கி.மீ. என மொத்தம் சுமார் 61.74 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதைகள் அமை்ய உள்ளன.

இத்திட்டத்தின் மையப் பகுதி மித்தி நதிக்கு அடியில் சென்று பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் மற்றும் தாராவியை இணைக்கும். அங்கிருந்து நான்கு திசைகளில் சுரங்கப் பாதைகள் பிரிந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது மும்பையின் முக்கியச் சாலைகளில் வாகனங்கள் மணிக்கு 15 முதல் 20 கி.மீ. வேகத்தில் மட்டுமே ஊர்ந்து செல்கின்றன.

இதற்கு மாற்றாக அமையவுள்ள இந்த வழித்தட சுரங்க சாலைகளில் (14 மீட்டர் விட்டம் கொண்டவை), வாகனங்கள் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் தடையின்றிச் செல்லும். பயணிகளின் பாதுகாப்புக்காக ஒவ்வொரு 300 மீட்டருக்கும் குறுக்கு வழிகள் அமைக்கப்பட உள்ளன.

மித்தி நதிக்கு அடியிலும், சதுப்புநிலக் காடுகளுக்கு அருகிலும் சுரங்கம் அமைக்கப்படுவதால், கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி உள்ளிட்ட 20 தடையின்மைச் சான்றிதழ்களை இத்திட்டத்துக்கு பெற வேண்டியுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT