புதுடெல்லி: இந்தியாவில் ஆப்பிளின் புதிய ஐபோன் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களின் விற்பனை நேற்று தொடங்கியது.
இதையொட்டி நாடு முழுவதும் உள்ள ஆப்பிள் சாதனங்கள் விற்பனை நிலையங்களில் வாங்குபவர்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டனர். செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற்ற ‘சர்ப்ரைஸ் அண்ட் ஷைன்’ நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனம் இந்த புதிய மாடல் கைபேசிகைளை அறிமுகப்படுத்தியது.
ஆன்லைன் ஸ்டோர் மற்றும் நாட்டின் ஆறு சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் இப்போது இந்த ப்ரோ மாடல்கள் கிடைக்கின்றன. புதிய ஐபோன்-களின் விலையை கணிசமாக உயர்த்தியிருந்தபோதும், வாங்குபவர்களின் ஆர்வம் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பம்சங்கள்
ஐபோன் வாங்குவது தங்களுக்கு ஒரு திருவிழா போன்றது என்று குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள், முந்தைய மாடல்களுடன் ஒப்பிடும்போது ஐஓஎஸ் 27, அதிநவீன செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அம்சங்கள், மேம்பட்ட கேமரா தரம், ஏ20 ப்ரோ சிப் மற்றும் வேப்பர் சேம்பர் போன்ற சிறப்பம்சங்கள் உள்ளதாலேயே தாங்கள் உடனடியாக இந்த புதிய போன்களை வாங்கியதாகத் தெரிவித்தனர்.
இந்தப் புதிய தொலைபேசிகளில் மாறும் அபெர்ச்சர் கொண்ட 48 எம்பி பியூஷன் முதன்மை கேமராவும், புதிய ப்ரோ கேமரா கட்டுப்பாடுகளும் இடம்பெற்றுள்ளன.
4 வண்ணங்கள்
கருப்பு, வெள்ளி, கிளாசியர், புதிய பர்கண்டி ஆகிய 4 வண்ணங்களில் வெளிவந்துள்ள ஐபோன் 18 ப்ரோ 256ஜிபி மாடலின் ஆரம்ப விலை ரூ.1,64,900 ஆகும்; இதன் 512ஜிபி, 1டிபி மற்றும் 2டிபி மாடல்கள் முறையே ரூ.1,89,900, ரூ.2,39,900 மற்றும் ரூ.3,14,900 விலையில் விற்கப்படுகின்றன.