இந்தியா

“யார் தேச விரோதி என்பது பற்றி பிரதமர் மோடியுடன் விவாதிக்க தயார்” - ராகுல் காந்தி சவால்

மோகன் கணபதி

புதுடெல்லி: யார் தேச விரோதி, யார் வெளிநாட்டு சக்திகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்பது குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிக்கத் தான் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இது தொடர்பாக தான் ஏற்கெனவே விடுத்த சவால் இன்னும் அப்படியேதான் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

சத்தீஸ்கரின் பஸ்தரில் துணை ராணுவப் படையினருடன் தீபாவளி பண்டிகையை நேற்று கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் அவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும், அதேநேரத்தில் நக்ஸல் மனநிலை கொண்டவர்கள் மக்களை தூண்டிவிட்டு வருவதாகவும், அவர்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், ‘அன்புள்ள துணை ராணுவப் படையினரே, பிரதமரின் பொய்களை நீங்கள் நம்பவில்லை என்பதை உங்கள் முகங்களே சொல்லிவிட்டன. அவர் எங்களை நக்சல்கள் என்று அழைத்தார்.

எனது சவால் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. யார் தேச விரோதி, யார் வெளிநாட்டு சக்திகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்பது குறித்து என்னுடன் விவாதிக்க அவர் வரட்டும். எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் வரலாம்.

அந்த விவாதத்துக்குப் பிறகு, எந்தவொரு வீரரின் முன்னிலையிலும் மீண்டும் நிற்பதற்கான துணிச்சல் பிரதமருக்கு இருக்காது. இது எனது உத்தரவாதம்’ என தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT