புதுடெல்லி: வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மக்களவையில் இன்று (ஜூலை 27) அறிமுகம் செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மசோதாவை அறிமுகப்படுத்தினார்.
மழைக்காலக் கூட்டத் தொடரின் 6-ம் நாளான இன்று வழக்கம்போல் காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின. அவை நடவடிக்கைகள் தொடங்கியவுடன் நீட் விவகாரம் மற்றும் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது காவல்துறை எடுத்த நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.
அப்போது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் இருக்கைகளுக்கு திரும்பி, விவாதங்களில் பங்கேற்குமாறு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தினார்.
அப்போது பேசிய ஓம் பிர்லா, “நான் மீண்டும் ஒருமுறை உங்களை வலியுறுத்துகிறேன். அவையின் கண்ணியத்தையும் மரபையும் மீறும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்” என்று எச்சரித்தார். ஆனாலும், மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை 12 மணிக்கு கூடியதும், எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டன. கடும் அமளிக்கு மத்தியில் பொதுத் தேர்வு (முறைகேடுகளை தடுத்தல்) திருத்த மசோதா 2026-ஐ, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிமுகம் செய்தார். தொடர்ந்து அமளி நிலவியதால் அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடாமல் விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கிரண் ரிஜிஜு, “நாடு முழுவதும் மாணவர்கள் எழுப்பிய கவலைகளை கருத்தில் கொண்டு வினாத்தாள் கசிவு போன்ற சிக்கல்களைத் தீர்ப்பதற்காக ஒரு முக்கிய மசோதா மக்களவையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியும் பிற எதிர்க்கட்சிகளும் இதை விவாதிக்க மறுத்து, அமளியில் ஈடுபடுகின்றன. பிரதமர் எடுத்துள்ள முக்கிய முடிவை அவர்கள் பரிசீலிக்க வேண்டும். தேர்வு முறையை சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு முறையை சீரமைக்கவும் எதிர்காலத்தில் வினாத்தாள் கசிவுகள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் ஒரு புரட்சிகரமான மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவில் ஈடுபடும் எவருக்கும் கடுமையான மற்றும் காலக்கெடுவுக்குள் தண்டனை வழங்குவதற்கான ஏற்பாடுகள் இதில் செய்யப்பட்டுள்ளன.
இத்தனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பிறகும் விவாதம் அனுமதிக்கப்படாவிட்டால், அது தவறான செய்தியை அளிக்கும். நாட்டின் மாணவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளுமாறு காங்கிரஸ் கட்சியை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
நாடாளுமன்றத்தைத் தவிர வேறு எங்கே நாம் இந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்க முடியும்? நாடாளுமன்றத்தில் முழுமையான வெளிப்படையான விவாதத்தை நடத்த முன்வாருங்கள்.” என கேட்டுக்கொண்டுள்ளார்.
வினாத்தாள் கசிவு மசோதா: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து கடந்த 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தற்போது வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகள், பொதுத்தேர்வுகள் (முறைகேடுகளை தடுத்தல்) சட்டம் 2024-ன் கீழ் விசாரிக்கப்படுகின்றன. இதில் முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டு புதிய மசோதா வரையறுக்கப்பட்டு உள்ளது.
மசோதா குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: புதிய மசோதாவின்படி வினாத்தாள் கசிவு குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும், குழுவாக, கும்பலாக முறைகேட்டில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும். முறைகேடுகளில் ஈடுபடும் தேர்வர்கள் அடுத்த 8 ஆண்டுகள் எந்த ஒரு பொதுத்தேர்வையும் எழுத முடியாது.
வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு அதிரடிப் படை (எஸ்டிஎப்) நியமிக்கப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 3 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.