புதுடெல்லி: வினாத்தாள் கசிவு தொடர்பான மோசடிகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு சிறை, ரூ.10 கோடி வரை அபராதம் விதிக்க வகை செய்யும் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து கடந்த 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தற்போது வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகள், பொதுத்தேர்வுகள் (முறைகேடுகளை தடுத்தல்) சட்டம் 2024-ன் கீழ் விசாரிக்கப்படுகின்றன. இதில் முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டு புதிய மசோதா வரையறுக்கப்பட்டு உள்ளது. மக்களவையில் இந்த மசோதாவை மத்திய பணியாளர், பயிற்சித் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று தாக்கல் செய்ய உள்ளார்.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: புதிய மசோதாவின்படி வினாத்தாள் கசிவு குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும், குழுவாக, கும்பலாக முறைகேட்டில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும். முறைகேடுகளில் ஈடுபடும் தேர்வர்கள் அடுத்த 8 ஆண்டுகள் எந்த ஒரு பொதுத்தேர்வையும் எழுத முடியாது.
வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு அதிரடிப் படை (எஸ்டிஎப்) நியமிக்கப்படும். இந்த அதிரடிப் படை 2 மாதங்களுக்குள் விசாரணையை நிறைவு செய்ய வேண்டும். வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். இந்த நீதிமன்றங்களில் நாள்தோறும் விசாரணை நடைபெறும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 3 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும்.
அந்தந்த மாநில அரசுகள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் ஆலோசனைகளின்படி சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். சிறப்பு நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்யலாம். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட செல்ஃபி வீடியோவில், ‘‘மாணவர்களின் எதிர்காலத்துக்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவர்களது எதிர்கால வாழ்க்கையோடு விளையாடிய நபர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் 27-ம் தேதி (இன்று) புதியமசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் மிகக் கடுமையான விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. நீட் வினாத்தாள் கசிவு, நாடாளுமன்ற பேரணியில் நடத்தப்பட்ட தடியடி உள்ளிட்ட காரணங்களை முன்னிறுத்தி இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தன.
இதனால் மழைக்கால கூட்டத் தொடரின் முதல் வாரம் முழுமையாக முடங்கியது. தற்போது 2-வது வாரத்தின் முதல் நாளில் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனால் இரு அவைகளும் சுமுகமாக செயல்படும், புதிய மசோதாவுக்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.