அமராவதி: பட்டாசு வெடி விபத்துகளை தடுக்க சிவகாசிக்கு சென்று ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யுங்கள் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா வேட்லபாளையம் பகுதியில் கடந்த சனிக்கிழமை பிப்ரவரி 28ம் தேதி பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து நடந்தது. இந்த விபத்தில் 23 தொழிலாளர்கள் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். 9 பேர் ஆபத்தான நிலையில் காக்கி நாடா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் நிதி உதவியை ஆந்திர அரசு அறிவித்தது.
மேலும் பிரதமர் தரப்பில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம் அறிவிக்கப்பட்டது. பாஜகவின் ஆந்திர மாநில தலைவர் மாதவ் தரப்பில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது. விபத்து குறித்து முழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
சிவகாசிக்கு செல்லுங்கள் இந்நிலையில், நேற்று அமராவதியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், பட்டாசு தொழிற்சாலை விபத்துகளை எவ்வாறு தடுப்பது ? லைசென்ஸ்களை எவ்வாறு முறைப்படுத்துவது ? தொழிற்சாலைகளுக்கான நிபந்தனைகளை எவ்வாறு வழி வகுப்பது ? விபத்துகள் நடக்காமல் இருக்க எடுக்க வேண்டிய நிபந்தனைகள் என்ன ? என்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் கூறுகையில், ”தமிழகத்தில் உள்ள சிவகாசியில் கோடிக்கணக்கில் ஆண்டுதோறும் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. அங்கு அதிகாரிகள் குழு சென்று ஆய்வு செய்யுங்கள். அங்கு எவ்வாறு நிபந்தனைகள் கடைபிடிக்கப்படுகின்றன ? என்று நேரில் சென்று அறிந்து கொண்டு, அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யுங்கள்” என உத்தரவிட்டார்.