பாஜக எம்.பி கங்கனா ரனாவத்

 
இந்தியா

“அன்று என்னை மகாராஷ்டிராவில் இருந்து வெளியேற சொன்னவர்கள் இன்று...” - சிவசேனாவை விளாசிய கங்கனா ரனாவத்

அனலி

மும்பை: மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவை முன்வைத்து உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனாவை கடுமையாக விமர்சித்துள்ளார் கங்கனா ரனாவத்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 29 மாநகராட்சிகளில் மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட 25 மாநகராட்சிகளை பாஜக கைப்பற்றுகிறது.

இது குறித்து பாஜக எம்.பி.யும், நடிகையுமான கங்கனா ரனாவத் அளித்த ஊடகப் பேட்டியில், “என்னை துன்புறுத்தி, எனது வீட்டை தரைமட்டமாக்கி, என்னை வசைபாடியவர்களை, நான் மகாராஷ்டிராவை விட்டே வெளியேற வேண்டும் என்று சொன்னவர்களை இன்று மகாராஷ்டிரா வெளியேற்றியுள்ளது.

இவர்களைப் போன்ற பெண் வெறுப்பாளர்கள், குடும்ப அரசியல் செய்யும் கும்பலைச் சேர்ந்தவர்கள் மக்கள் தீர்ப்பால் சரியான இடத்துக்கு அனுப்பப்பட்டிருபதில் எனக்கு மகிழ்ச்சி.” என்று தெரிவித்துள்ளார்.

வீடு இடிப்பின் பின்னணி: கடந்த 2020-ம் ஆண்டு மும்பை பாந்த்ரா மேற்கில் இருந்த கங்கனா ரனாவத்தின் பங்களாவின் ஒருபகுதி மும்பை மாநகராட்சியால் இடிக்கப்பட்டது. அப்போது சிவசேனா ஆட்சியில் இருந்தது. இன்று சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு, ஷிண்டே பிரிவு என்று இரண்டாகப் பிரிந்து இதில் ஷிண்டே பிரிவு பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியில் உள்ளது.

2020-ல் மும்பையை ‘மினி பாகிஸ்தான்’ என்று கூறியதற்கு கங்கணா மன்னிப்புக் கோர வேண்டும். அவ்வாறு மன்னிப்புக் கேட்காவிட்டால், மும்பைக்கு வரக்கூடாது என்று அப்போதைய சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் எச்சரித்தார். இதனால் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்துக்கும், கங்கணா ரணாவத்துக்கும் இடையே ட்விட்டரில் கடுமையாக வாக்குவாதம் நடந்தது.

இதனால் நடிகை கங்கணா ரணாவத்துக்கும், மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சிக்கும் இடையிலான மோதல் வெடித்தது. இந்தச் சூழலில், நடிகை கங்கணா ரணாவத்துக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியதையும், சிவசேனா தலைவர்கள் கண்டித்தனர். அரசியல் உள்நோக்கம் கொண்டது என விமர்சித்தனர்.

இந்தச் சூழலில் மும்பை மாநகராட்சி சார்பில் ஒரு குழுவினர், மும்ரை பாந்த்ராவில் உள்ள பாலி ஹில் பகுதியில் உள்ள கங்கணா ரணாவத் வீட்டில் அனுமதியின்றி பல்வேறு கட்டிங்கள் கட்டப்பட்டதற்கு 24 மணிநேரத்தில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர்.

ஆனால், கங்கணா ரணாவத் தரப்பில் எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை. மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அளித்த கெடு முடிந்ததையடுத்து, மண் அள்ளும் இயந்திரத்தின் உதவியுடன் கங்கணா வீட்டில் அனுமதியின்றி செய்யப்பட்டிருந்த மாற்றங்களை இடித்து அதிகாரிகள் அகற்றினர்.

இதைத்தான் இப்போது கங்கனா சுட்டிக்காட்டி உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

SCROLL FOR NEXT