புதுடெல்லி: ஆனைமங்கலச் செப்பேடுகள் சோழ மன்னர்களின் பொக்கிஷம் என்று மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் மோடி வானொலியில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று வானொலியில் 134-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: சில நாட்களுக்கு முன்பு எனக்கு ஐரோப்பாவில் உள்ள நெதர்லாந்துக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு நான் பல்வேறு கூட்டங்களில் பங்கேற்றேன். அங்கு நடந்த ஒரு சிறப்பு நிகழ்ச்சியில், சோழர் காலத்தைச் சேர்ந்த பழமையான செப்புப் பட்டயங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிகழ்வில் நெதர்லாந்து பிரதமரும் கலந்து கொண்டார்.
இந்த ஆனைமங்கலச் செப்பேடுகள் குறித்து நாடு முழுவதிலும் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் எனக்குத் தொடர்ந்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. உலகெங்கிலும் உள்ள தமிழ் சமூகத்தினரிடையே இதற்கென ஒரு தனி உற்சாகமும் நிலவுகிறது. இதில் 21 பெரிய மற்றும் 3 சிறிய செப்பேடுகள் உள்ளன. இவை முக்கியமாக முதலாம் ராஜேந்திர சோழ மன்னருடன் தொடர்புடையவை.
இந்த செப்பேடுகள் ஆனைமங்கலம் கிராமத்தை புத்த மடாலயத்துக்கு (புத்த விஹாரம்) சோழ மன்னர் தானமாக வழங்கியதைக் குறிப்பிடுகிறது. அவை சோழ வம்சத்தின் சாதனைகளையும் விவரிக்கின்றன. சோழ வம்சத்தின் வலிமைமிக்க கடற்படை ஆற்றலை அவை காட்டுகின்றன. தென் கிழக்கு ஆசிய நாடுகளுடனான அவர்களின் உறவுகள் பற்றிய தகவல்களையும் அவை வழங்குகின்றன. சோழப் பேரரசின் வளமான வரலாறு மற்றும் கலாச்சாரத்தை எண்ணி நாம் அனைவரும் பெருமிதம் கொள்கிறோம். இத்தகைய விலைமதிப்பற்ற பாரம் பரியத்தைப் பாதுகாப்பதில் மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
சோழ மன்னர்கள், போர்களில் பெற்ற வெற்றிகள், சாதனைகளை இவை விவரிக்கின்றன. தமிழகத்துக்கும், தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இருந்த ஆழமான வணிக, தூதரக உறவுகள் குறித்தும் இந்த செப்பேடுகள் கூறுகின்றன. இந்த வரலாற்று ஆவணங்கள் தமிழகத்தின் பொற்கால வரலாற்றை பறைசாற்றுகின்றன.
விளையாட்டு வீரர்கள்: இந்திய விளையாட்டு வீரர்கள் சிறப்பான செயல்பாடுகள் மூலம் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களின் சாதனைகள் புதிய அளவுகோல்களை உருவாக்குவதோடு, அடுத்த தலைமுறை வீரர்களுக்கும் உத்வேகம் அளிப்பதாக உள்ளன. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் சமீபத்தில் நடந்த தேசிய சீனியர் பெடரேஷன் கோப்பை தடகள போட்டியில் பல்வேறு பிரிவுகளில் 4 தேசிய சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. குரீந்தர்வீர் சிங், விஷால் டி.கே., தேஜஸ்வின் சங்கர், தேவ் மீனா, குல்தீப் குமார் ஆகியோர் தத்தமது பிரிவுகளில் புதிய சாதனைகளை படைத்துள்ளனர்.
100 மீட்டர் ஓட்டத்தில் இரண்டு நாட்களுக்குள் தேசிய சாதனை மூன்று முறை முறியடிக்கப்பட்டது. குரீந்தர் வீர் சிங் முதலில் நடைபெற்ற அரை இறுதியில் 10.17 விநாடிகளில் ஓடி சாதனை படைத்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஹீட் பிரிவில் அனிமேஷ் குஜுர் 10.15 விநாடிகளில் ஓடி அந்த சாதனையை முறியடித்தார். இதைத் தொடர்ந்து இறுதிச் சுற்றில் குரீந்தர் வீர் சிங் 10.09 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து புதிய தேசிய சாதனையைப் படைத்தார். குரீந்தர்வீர் சிங், அனிமேஷ் குஜூர் ஆகியோரின் சாதனைகள் இந்திய தடகளத் துறையில் வளர்ந்து வரும் வலிமையை வெளிப்படுத்துகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.