அமூர் வல்லூறு பறவையின் பயண தூரத்தை காட்டும் வரைபடம். (உள்படம்) அமூர் வல்லூறு பறவை.
புதுடெல்லி: அமூர் வல்லூறு பறவை உலகிலேயே மிக நீண்ட தூரம் கடல் கடந்து வலசை போகும் பறவை. 150 கிராம் எடை கொண்டது. இப்பறவைகள் ஆண்டு தோறும், கிழக்கு ரஷ்யா , வடகிழக்கு சீனா மற்றும் மங்கோலியாவின் இனப்பெருக்கப் பகுதிகளிலிருந்து தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க குளிர்காலத் தங்குமிடங்களுக்குப் பயணிக்கின்றன.
இப்பயணம் வடகிழக்கு இந்தியா வழியாகச் செல்கிறது. அரிதாக தமிழ்நாட்டின் ராஜபாளையம், கோடியக்கரை பகுதிகளிலும் தென்படுவதுண்டு.
இப்பயணத்தில் மிகவும் சவாலான பகுதி அரபிக்கடலைக் கடப்பது. இதற்காக அவை இந்தியாவின் மணிப்பூர் மற்றும் நாகாலாந்தில் பல நாட்கள் தங்கி கரையான், தட்டான் உள்ளிட்ட பூச்சிகளை உண்டு, ஆற்றலை சேமித்து வைத்துக்கொள்கின்றன. இப்பறவைகளை ஆராய, இந்திய வனவிலங்கு நிறுவனம், மணிப்பூர் அமூர் வல்லூறு கண்காணிப்புத் திட்டத்தை மேற்கொள்கிறது.
101 மணி நேரத்தில்.. அதன்படி ஆலங் (பெண்), அபபாங்(ஆண்) என்ற 2 அமூர் வல்லூறுகளின் மீது இலகுரக செயற்கைக்கோள் டிரான்ஸ்மிட்டர்களை ஆய்வாளர் கள் பொருத்தினர். ஆலங் 101 மணி நேரத்தில், 5,700 கிலோமீட்டர் தூரத்துக்கு ஓய்வின்றி பறந்து, சோமாலியாவை அடைந்துள்ளது. அபபாங், 95 மணி நேரத்தில் 4,100 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து, இன்னமும் அரபிக்கடலுக்கு மேலே பறந்துகொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறினர்.