சஞ்சய் ராவத் |கோப்புப் படம்

 
இந்தியா

“ஏக்நாத் ஷிண்டேவின் சிவ சேனாவை அமித் ஷா அழித்துவிடுவார்” - சஞ்சய் ராவத்

மோகன் கணபதி

மும்பை: ஏக்நாத் ஷிண்டேவின் சிவ சேனாவை அமித் ஷா அழித்துவிடுவார் என்று சிவ சேனா (யுபிடி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

உடல்நிலை பாதிப்பு காரணமாக சுமார் ஒரு மாதமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத சஞ்சய் ராவத், இன்று மும்பையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "ஏக்நாத் ஷிண்டேவின் சிவ சோனாவை அமித் ஷா விரைவில் அழித்துவிடுவார். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. ஒன்றுபட்ட சிவ சேனாவை உடைத்தது போலவே, ஏக்நாத் ஷிண்டேவின் சிவ சேனாவை அமித் ஷா உடைக்கப் போகிறார். அதில் இருந்து 35 எம்எல்ஏக்கள் பிரிந்து செல்லப் போகிறார்கள்.

இதைச் செய்வதற்காகவே, மகாராஷ்டிர பாஜக தலைவராக ரவீந்திர சவான் நியமிக்கப்பட்டுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் (டிச.2) வரை கூட்டணியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என ரவீந்திர சவான் கூறி இருக்கிறார். இதில் இருந்தே பாஜகவின் திட்டத்தை புரிந்து கொள்ளலாம். முதுகில் குத்துவதில் சாதனை படைத்த கட்சி பாஜக. பால் தாக்கரேவின் முதுகிலேயே குத்தியவர்கள் அவர்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் கோடிக்கணக்கான ரூபாயை பாஜக தேர்தல்களுக்காக செலவிட்டுள்ளது. இது மாநிலத்தின் தேர்தல் கலாச்சாரத்தை சீர்குலைத்துள்ளது. முதல்வரும் அரசாங்கமும் அடிமட்டத்தில் தலையிடவில்லை. ஆனால், கட்சி நிர்வாகிகள் அவர்கள் அளவில் செயல்படுகிறார்கள். யார் பெரியவர் என்பதை காட்டுவதற்கான களமாக உள்ளாட்சித் தேர்தலை பாஜக கருதுகிறது.

நாளை(டிச.2) நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அவர்கள் பணத்தை வெள்ளமென பாய்ச்சி உள்ளார்கள். தொகுதிக்கு குறைந்தது ரூ.15 கோடி முதல் ரூ. 20 கோடி வரை பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு வாக்கு ரூ.10,000-க்கு விற்கப்படுகிறது.

முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் ஊழலுக்கு எதிரானவர் என்றால், டிச.1-ம் தேதி வீட்டுக்கு வெளியே தூங்குங்கள்; லட்சுமி (பணம்) உங்களைத் தேடி வரும் என்று கூறிய அமைச்சர் குலாப்ராவ் பாட்டீலை பதவி நீக்கம் செய்திருக்க வேண்டும். இதுபோன்ற பேச்சுக்களுக்காக தேர்தல் ஆணையம் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT