இந்தியா

“எல்லை பாதுகாப்பில் அலட்சியம் காட்டியவர் மம்தா பானர்ஜி” - அமித் ஷா சாடல்

மோகன் கணபதி

சிலிகுரி: வங்கதேசத்தை ஒட்டிய எல்லையில் வேலி அமைக்க 1,129 ஏக்கர் நிலத்தை ஒதுக்குமாறு பலமுறை கோரியும் அதை கண்டுகொள்ளாமல் இருந்தவர் மம்தா பானர்ஜி என அமித் ஷா விமர்சித்துள்ளார்.

நேபாளம் மற்றும் பூடான் உடனான இந்தியாவின் திறந்தவெளி எல்லையை பாதுகாக்கும் சஷாஸ்த்ர சீமா பால் (எஸ்எஸ்பி) எனும் மத்திய பாதுகாப்புப் படையின் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார். எஸ்எஸ்பியின் தலைமையகம் அமைந்துள்ள மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய அமித் ஷா, “எஸ்எஸ்பி (SSB) நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நல்வாய்ப்பு முதன்முறையாக மேற்கு வங்கத்தின் முதல்வருக்கு கிடைத்துள்ளதாக சுவேந்து அதிகாரி சற்றுமுன் குறிப்பிட்டார். நானும் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

ஆனால் ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதற்கு முன்பு முதல்வர்களாக இருந்தவர்களையும் நாங்கள் அழைத்திருந்தோம். ஆனால் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்பவில்லை. அந்த மரபை முதல்வர் சுவேந்து அதிகாரி உடைத்துள்ளார். அதற்காக அவரை பாராட்டுகிறேன்.

எஸ்எஸ்பி அல்லது பிஎஸ்எப், இவை எந்தவொரு அரசியல் கட்சியையும் சார்ந்தவை அல்ல. இவை நாட்டின் எல்லைகளை காக்கும் படைகள். வங்கதேசத்தை ஒட்டிய எல்லையில் வேலி அமைக்க 1,129 ஏக்கர் நிலத்தை வழங்குமாறு முதல்வராக இருந்த மம்தா பானர்ஜியிடம் நாங்கள் பலமுறை வலியுறுத்தினோம். 2014 முதல் வலியுறுத்தியும் அதை அவர் கண்டுகொள்ளவில்லை.

சுவேந்து அதிகாரி முதல்வராக வந்த பின்னரே அந்த நிலம் கிடைத்தது. அவர் மேற்கு வங்கத்தின் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து, பாதுகாப்பு தொடர்பான எந்தவொரு உதவியும் உடனடியாக வழங்கப்பட்டுவிடுகிறது. அரசு அமைந்த 45 நாட்களுக்குள்ளேயே 1,129 ஏக்கர் நிலம் எங்களுக்கு வழங்கப்பட்டது.

பாஜக முதல்வர் என்பதால் மட்டுமல்ல, ஊடுருவல் தடுக்கப்படாத வரை மேற்கு வங்கமும் இந்தியாவும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதை புரிந்துகொண்டதாலுமே சுவேந்து அதிகாரி உடனடி நடவடிக்கைகளை எடுக்கிறார்.

தேசியப் பாதுகாப்பில் சிலிகுரி வழித்தடத்தின் (Siliguri Corridor) முக்கியத்துவத்தை மோடி அரசு மிகச் சரியாக உணர்ந்துள்ளது. மிகவும் முக்கியமான இந்த வழித்தடம் எட்டு மாநிலங்களை இணைக்கிறது.

நேபாளம், பூட்டான் மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளின் எல்லைகள் இந்தச் சிலிகுரி வழித்தடத்தை ஒட்டியுள்ளன. ஒரு வகையில் இதன் பாதுகாப்பு நாட்டின் பாதுகாப்புடன் பிணைக்கப்பட்டுள்ளது. சிலிகுரி வழித்தடத்தை ஊடுருவ முடியாத பாதுகாப்பான பகுதியாக மாற்ற, நாங்கள் ஒரு முக்கோணப் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கியுள்ளோம்” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT