இந்தியா

“வெளிநடப்பு செய்வதை காங்கிரஸ் கலாச்சாரமாக மாற்றிவிட்டார் ராகுல் காந்தி” - அமித் ஷா சாடல்

மோகன் கணபதி

புதுடெல்லி: நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்காமல், வெளிநடப்பு செய்வதை காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரமாக ராகுல் காந்தி மாற்றிவிட்டதாக அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.

இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்; அராஜகத்தை ஒழிப்போம் என்ற பெயரில் பாஜக நாடு முழுவதும் தொடர் பேரணிகளை நடத்தி வருகிறது.

ஹரியானாவின் கர்னால் நகரில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றுப் பேசிய பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, “இந்த பேரணியை நடத்த வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது என்பதை இன்று நான் விளக்க விரும்புகிறேன். தொடர்ந்து மூன்றாவது முறையாக, இந்த நாட்டு மக்கள் நரேந்திர மோடியை மகத்தான் ஆணையுடன் பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளனர். 2024 முதல் ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது.

ஜனநாயகத்தில் நாடாளுமன்றமே விவாதத்துக்கான உச்ச அரங்கம். ஆனால், ராகுல் காந்தி நாடாளுமன்றத்தைச் செயல்பட அனுமதிப்பதில்லை. அடிப்படை பிரச்சினைகள் குறித்த விவாதங்களில் ஈடுபட அவர் மறுக்கிறார். மாறாக, ரகளையை உருவாக்குவதையும், வெளிநடப்பு செய்வதையும் காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரமாக மாற்றிவிட்டார். நாடாளுமன்றம் செயல்படுவதை அவர் தடுக்கிறார்.

80 ஆண்டு கால ஜனநாயகம் உங்களின் ஏமாற்று வித்தைகளால் வீழ்ந்துவிடும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? நாங்கள் தெருவோர மக்கள். நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும், எங்கள் கிராமங்களிலும், எங்கள் வயல்களிலும் பாஜக உங்களுக்குத் தகுந்த பதிலடியைக் கொடுக்கும்.

நீங்கள் கூட்டத்தைக் கூட்ட தீர்மானித்தால், அதற்கு தகுந்த பதிலடி கொடுக்க பாஜக தொண்டர்கள் தயாராக இருப்பார்கள். ஜனநாயகம் காப்போம்; அராஜகத்தை ஒழிப்போம் என்ற பேரணி, ராகுல் காந்திக்கு வலுவான மற்றும் உறுதியான பதிலடியைக் கொடுத்துள்ளது” என தெரிவித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT