புது தில்லி: அமர்நாத் யாத்திரை அடுத்த மாதம் 3-ஆம் தேதி தொடங்குகிறது. இமயமலையில் 3,880 மீட்டர் உயரத்தில் உள்ள குகைக் கோயிலுக்கு, 57 நாட்கள் யாத்திரை நடைபெறும்.
பக்தர்கள் பஹல்காம் வழித்தடத்தின் மூலமாகவும், பால்தல் வழித்தடத்தின் மூலமாகவும் பயணிப்பார்கள். இந்நிலையில், யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா, ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, மற்றும் சிஆர்பிஎப் டிஜிபி ஜி.பி.சிங் ஆகியோருடன் மற்ற பாதுகாப்பு மற்றும் நிர்வாக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
பக்தர்களுக்கு முழுமையான பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்காக, மேம்பட்ட கண்காணிப்பு தொழில்நுட்பம், உளவுத்துறை அடிப்படையிலான கண்காணிப்பு மற்றும் பல்துறை அமைப்புகளின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை பாதுகாப்பு முகமைகள் ஒன்றிணைத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு காஷ்மீர் போலீஸாரும் அதிநவீன சோதனை மற்றும் நாசவேலை தடுப்பு உபகரணங்களை நிலைநிறுத்தியுள்ளனர். யாத்திரை வழித்தடத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகளை டிஜிட்டல் முறையில் சரிபார்ப்பதற்காக, க்யூஆர் குறியீடு அடிப்படையிலான "பஹ்சான் செயலியை" போலீஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இந்த அமைப்பானது, சரிபார்க்கப்படாத நபர்கள் யாத்திரை பகுதிக்குள் நுழைவதைத் தடுக்க உதவும். மேலும் தங்குமிட மையங்களின் ஆய்வுகள் மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சிஆர்பிஎப் டிஜிபி சிங், காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ததுடன், முன்கூட்டியே தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அசம்பாவிதங்கள் இல்லாத யாத்திரையை உறுதி செய்ய, பல்வேறு பாதுகாப்பு முகமைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் சிங் கூறினார்.