புதுடெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான 4 டிஜிட்டல் தளங்கள் மற்றும் சின்னங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் நேற்று அறிமுகம் செய்தார்.
பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த 2011-ம் ஆண்டில் நாடு தழுவிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் பிறகு 2021ம் ஆண்டில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கரோனா பெருந்தொற்று காரணமாக கணக்கெடுப்பு பணி தள்ளிவைக்கப்பட்டது.
இந்த சூழலில் நாடு முழுவதும் இரு கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இதன்படி ஏப்ரல் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை வீடுகள், கட்டிடங்கள், வீட்டில் உள்ள வசதிகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன. இதன்பிறகு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படும். அப்போது ஒவ்வொரு நபரின் சமூக, பொருளாதார தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன.
இந்த சூழலில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான டிஜிட்டல் தளங்கள், சின்னங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் நேற்று அறிமுகம் செய்தார். முதல் முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதற்காக 4 டிஜிட்டல் தளங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.
வீடுகள், கட்டிடங்கள் தொடர்பான பட்டியலை தயாரிக்க புதிதாக செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் பல்வேறு புவியியல் பகுதிகளை உறுதி செய்து, செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் வீடுகள், கட்டிடங்களின் பட்டியலை தயாரிக்க முடியும். மேலும் வீடுகள், கட்டிடங்கள் தொடர்பான தகவல்களை பதிவேற்ற புதிய செயலி உருவாக்கப்பட்டு உள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது மக்கள் தங்கள் விவரங்களைப் பதிவு செய்ய புதிதாக ஒரு டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த தளத்தை 16 மொழிகளில் பயன்படுத்த முடியும். மக்கள் தொகை கணக்கெடுப்பு மேலாண்மை மற்றும் கண்காணிப்புக்காக புதிய டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் வட்டார, மாவட்ட, மாநில நிலைகளில் உள்ள அதிகாரிகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை இந்த தளம் வாயிலாக கண்காணிக்க முடியும்.