ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீருக்கு தன்னாட்சி அதிகாரத்துடன் கூடிய மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த 2019-ம் ஆண்டு காஷ் மீருக்கான சிறப்பு அந்தஸ்து (சட்டப்பிரிவு 370) நீக்கப்பட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர், இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
இதன்படி ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன்கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் உதயமாகின. கடந்த 2024-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய மாநாடு கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
முதல்வர் உமர் அப்துல்லா, ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி வருகிறார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் 1953-ம் ஆண்டுக்கு முந்தைய அரசியலமைப்பு அந்தஸ்தை வழங்க வேண்டும் என்று கோரப்பட்டு உள்ளது.
அதாவது பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை, கரன்சி உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை தவிர்த்து இதர அனைத்து துறைகளிலும் காஷ்மீர் அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்க அதிகாரம் வழங்க வேண்டும் என்று தீர்மானத்தில் கோரப்பட்டு உள்ளது. மேலும் சட்டப்பிரிவு 370 மற்றும் 35-ஐ மீட்டெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து கோரிக்கைக்கு பாஜக முழு ஆதரவு தெரிவித்து உள்ளது. ஆனால் தன்னாட்சி அதிகாரம் மற்றும் சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கோருவதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் நேற்று சட்டப்பேரவையின் மையப் பகுதியில் கூடி தீர்மானத்துக்கு எதிராக குரல் எழுப்பினர். அமளியில் ஈடுபட்ட எம்எல்ஏக்களை வெளியேற்ற சபாநாயகர் அப்துல் ரஹீம் ரத்தர் உத்தரவிட்டார்.
இதன்பேரில் 4 எம்எல்ஏக்களை அவைக் காவலர்கள் வெளியேற்றினர். இதன்பிறகு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுனில் சர்மா கூறியதாவது: ஜம்மு காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார். அவர் அளித்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவார். காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்க பாஜக முழு ஆதரவு அளிக்கிறது.
ஆனால் இதைச் சீர்குலைக்கும் வகையில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தன்னாட்சி அதிகாரம் கோரி கடந்த 2000-ம் ஆண்டில் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா காலத்தில் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது அதுபோன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது நாட்டு நலனுக்கு எதிரானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முதல்வர் உமர் அப்துல்லா கூறும்போது, “தீவிரவாதம் முழுமையாக ஓய்ந்த பிறகே காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறுகிறது. இதை ஏற்க முடியாது. உடனடியாக மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.