ராமநாதபுரம் நீட் தேர்வு மையத்தில் தேர்வெழுத வந்த மாணவி | கோப்புப் படம்

 
இந்தியா

நாடு முழுவதும் மே.3-ல் நடந்த நீட் தேர்வு ரத்து: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

மோகன் கணபதி

புதுடெல்லி: வினாத்தாள் கசிந்த விவகாரத்தின் எதிரொலியாக நாடு முழுவதும் கடந்த 3-ம் தேதி (மே.3) நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மறு தேர்வு நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மருத்துவ இளநிலை பட்டப்படிப்புக்கான நீட் தேர்வு (NEET UG 2026) கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. எனினும், தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் வினாத்தாள் கசிந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசியத் தேர்வுகளை நியாயமான, பாதுகாப்பான மற்றும் நம்பகமான முறையில் நடத்துவதில் தேசிய தேர்வு முகமை கொண்டுள்ள உறுதிப்பாட்டுக்கு இணங்க, மே 3ம் தேதி நடந்த நீட் தேர்வு தொடர்பாக எழுந்துள்ள புகார்கள் தொடர்பாக சுயாதீனமான சரிபார்ப்பு மற்றும் தேவையான நடவடிக்கைகளுக்காக மத்திய முகமைகளுக்கு தேசிய தேர்வு முகமை கடந்த 8ம் தேதி பரிந்துரை செய்திருந்தது.

மத்திய முகமைகளுடன் ஒருங்கிணைந்து தேசிய தேர்வு முகமை மேற்கொண்ட ஆய்வுத் தகவல்கள் மற்றும் சட்ட அமலாக்க முகமைகளால் பகிரப்பட்ட விசாரணை முடிவுகளின் அடிப்படையில், மே 3 ஆம் தேதியன்று நடத்தப்பட்ட NEET (UG) 2026 தேர்வை ரத்து செய்யவும், தனியாக அறிவிக்கப்படும் தேதிகளில் அத்தேர்வை மீண்டும் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேசிய தேர்வு முகமைக்குக் கிடைத்த தகவல்களையும், சட்ட அமலாக்க முகமைகளால் பகிரப்பட்ட விசாரணை முடிவுகளையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, ​​தற்போதைய தேர்வு நடைமுறையைத் தொடர்ந்து நீடிக்க அனுமதிக்க இயலாது என்பது உறுதியாகிறது.

இவ்விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்வதற்காக, இதனை மத்தியப் புலனாய்வுத் துறைக்கு (CBI) பரிந்துரைக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. அத்துறையின் விசாரணைக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும், உதவிகளையும் தேசிய தேர்வு முகமை வழங்கும். இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை அளிக்கும்.

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், தேசியத் தேர்வு முகமையின் நம்பிக்கையை காக்கும் வகையிலும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு மீண்டும் நடத்தப்படுவதால், தேர்வர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் சிரமங்கள் ஏற்படும் என்பதை தேசிய தேர்வு முகமை நன்கு உணர்ந்துள்ளது. இத்தகைய பின்விளைவுகளை தேசிய தேர்வு முகமை சாதாரணமாகக் கருதவில்லை. இருப்பினும், இதற்கு மாற்றாக வேறு முடிவை எடுத்திருந்தால், அதிக தீங்குகள் ஏற்பட்டிருக்கும் என்பதாலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2026 மே மாதத் தேர்வுச் சுழற்சியின்போது பதிவு செய்யப்பட்ட விவரங்கள், தேர்வர்களின் தகுதிநிலை மற்றும் அவர்களால் தேர்வு செய்யப்பட்ட தேர்வு மையங்கள் ஆகியவை, மீண்டும் நடத்தப்படவுள்ள தேர்வுக்கும் அப்படியே எடுத்துக்கொள்ளப்படும். இதற்குப் புதிதாகப் பதிவு செய்யத் தேவையில்லை. கூடுதல் தேர்வுக்கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. இத்தேர்வு தேசிய தேர்வு முகமையின் வளங்களைப் பயன்படுத்தி மீண்டும் நடத்தப்படும்.

மீண்டும் நடத்தப்படவுள்ள தேர்வுத் தேதிகள் மற்றும் மீண்டும் வெளியிடப்படவுள்ள நுழைவுச்சீட்டு (Admit Card) குறித்த கால அட்டவணை உள்ளிட்ட மேலதிகத் தகவல்கள், முகமையின் அதிகாரப்பூர்வ வழிமுறைகள் வாயிலாக வெளியிடப்படும். தேர்வர்கள் மற்றும் பெற்றோர்கள் இவ்வதிகாரப்பூர்வ வழிமுறைகளை மட்டுமே சார்ந்திருக்குமாறும், சமூக ஊடகங்களில் பரவிவரும் சரிபார்க்கப்படாத தகவல்களைப் புறக்கணிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினாத்தாள் கசிவு விவகாரம்: 2026- 27-ம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்காக கடந்த மே 3-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வில் கேட்கப்பட்ட 200 வினாக்களில் 80%-க்கும் கூடுதலான வினாக்கள் தேர்வுக்கு பல நாள்கள் முன்பே ராஜஸ்தானில் வெளியாகி விட்டதாகவும், இது தொடர்பாக அம்மாநில காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரிப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

மருத்துவம் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த விஷயத்தில் தேசிய தேர்வு முகமை தொடர்ந்து அலட்சியமாக நடந்து கொள்வதாக அரசியல் கட்சிகளின் விமர்சனங்களும் எழுந்தன.

இந்நிலையில், வினாத்தாள் கசிந்ததால் கடந்த 3-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மறு தேர்வு நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஆனால், மறுதேர்வுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

SCROLL FOR NEXT