அருணாச்சல் முதல்வர் பெமா காண்டு

 
இந்தியா

ரூ.1,270 கோடி முறைகேடு புகாரில் சிக்கிய அருணாச்சல் பாஜக முதல்வர் பதவி விலகாதது ஏன்? - காங்கிரஸ்

வெற்றி மயிலோன்

புது டெல்லி: அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டுவின் குடும்பத்தினருக்கு ரூ.1,270 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர் ஏன் தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அருணாச்சலப் பிரதேச முதல்வரின் குடும்பத்தினருக்கு, ஜனவரி 2015 முதல் டிசம்பர் 2025 வரையிலான 10 ஆண்டு காலத்தில் செல்வாக்கின் அடிப்படையில் 1,270 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து, சிபிஐ விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு, கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உத்தரவிட்டது.

இது ஏதேனும் ஒரு கீழமை நீதிமன்றமோ அல்லது உயர் நீதிமன்றமோ பிறப்பித்த உத்தரவு அல்ல; இது உச்ச நீதிமன்றமே பிறப்பித்த உத்தரவாகும். ஆயினும், அந்த முதல்வர் தொடர்ந்து தனது பதவியில் நீடித்து வருகிறார். அவர் பொதுப்பணித் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகிப்பதால், சிபிஐ விசாரணைக்குத் தேவைப்படும் கோப்புகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரமும் அவரிடமே உள்ளது.

"நான் ஊழல் செய்யமாட்டேன்; மற்றவர்களையும் ஊழல் செய்ய விடமாட்டேன்" என்று ஒரு காலத்தில் முழக்கமிட்ட அந்த நபர் (பிரதமர் மோடி) இப்போது ஏன் மவுனம் சாதிக்கிறார்?

மேலும், அருணாச்சலப் பிரதேச முதல்வரை பதவி விலகுமாறு யாரும் ஏன் கோரவில்லை? இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே கேலிக்கூத்தாக்கும் ஒரு மிக மோசமான செயலாகும். அருணாச்சலப் பிரதேச முதல்வரைப் போன்றே, இதே வகையைச் சார்ந்த வேறு சில பாஜக முதல்வர்களும் உள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளார்.

'சேவ் மான் ரீஜியன் ஃபெடரேஷன்' (Save Mon Region Federation) மற்றும் 'வாலண்டரி அருணாச்சல் சேனா' (Voluntary Arunachal Sena) ஆகிய அமைப்புகள் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT