இந்தியா

பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு 27-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்: மத்திய அரசு அழைப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 28-ம் தேதி தொடங்குகிறது. இது குறித்து ஆலோசிக்க 27-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இந்தாண்டின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 28-ம் தேதி தொடங்குகிறது. முதல் நாளில் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுவார்.

          

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதை தே.ஜ.கூட்டணி அரசு வழக்கமாக கொண்டுள்ளது. இந்தாண்டு பிப்ரவரி 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. அதனால் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அரிதாக ஞாயிற்றுக்கிழமையில் பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார்.

இந்த பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு 27-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதான அரங்கில் 27-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 13-ம் தேதி முடிவடையும். 2-ம் கட்ட கூட்டத் தொடர் மார்ச் 9-ம் தேதி தொடங்கும். இந்தக் கூட்டத்தொடரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை விபி-ஜி ராம் ஜி’ என்று மாற்றியது உட்பட பல்வேறு விவகாரங்களை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில், பட்ஜெட் கூட்டம் தொடங்கவுள்ளது.

மத்திய பட்ஜெட் 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டதும், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் பிப்ரவரி 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை நடைபெறும்.

SCROLL FOR NEXT