“டெல்லி சிம்மாசனத்துக்கான வழி, லக்னோவின் வீதிகள் வழியாகவே கடந்து செல்கிறது” என்பது தேசிய அரசியலில் புகழ்பெற்ற ஒரு வாக்கியம்.
இந்திய அரசியலின் தலையெழுத்தையே நிர்ணயிக்கும் திறன் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில், மீண்டும் ஓர் அதிகார அக்னிப் பரீட்சை தொடங்கப் போகிறது. ஒருபுறம் யோகி ஆதித்யநாத்தின் வீச்சுமிக்க இந்துத்துவ கொள்கை, மறுபுறம் அதைத் தகர்க்கத் துடிக்கும் அகிலேஷ் யாதவின் ‘பிடிஏ’என்ற பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், சிறுபான்மையினரை உள்ளடக்கிய சமூக வியூகம்.
இந்தக் களத்தில் வெறும் சாதி கணக்குகளும், காகிதக் கூட்டணிகளும் மட்டும் போதாது என்பதை உணர்ந்த சமாஜ்வாதி கட்சி, பாஜகவின் பலத்தை எதிர்கொள்ள ‘சாஃப்ட் பவர்’ ஆளுமையான மைன்புரி எம்.பி. டிம்பிள் யாதவை முதன்மைப்படுத்தி வருகிறது.
உத்தரப் பிரதேச வாக்காளர்களில் பாதி எண்ணிக்கையில் உள்ள பெண் வாக்காளர்களைக் கவரும் ஓர் ‘அமைதிப் புயல்’ ஆக பார்க்கப்படும் டிம்பிள், பாஜக முன்வைக்கும் ‘குண்டா ராஜ்’ விமர்சனங்களுக்கு தன் கண்ணியமான ஆளுமையால் தக்க பதிலடி தருகிறார்.
‘இண்டியா’ கூட்டணியில் இருந்தாலும், உத்தரப் பிரதேசத்தில் பாஜகவை நேருக்கு நேர் எதிர்க்கும் உண்மையான பலம் சமாஜ்வாதிக்கு தான் உண்டு என்பதை, 111 சட்டமன்றத் தொகுதிகளின் வெற்றி மூலம் நிரூபித்துக் காட்டியவர் அகிலேஷ் யாதவ்.
பாஜகவின் மாபெரும் தேர்தல் நகர்வுகளை எதிர்கொள்ளச் சமாஜ்வாதி வகுத்துள்ள பிடிஏ வியூகமும், டிம்பிளின் வருகையும் உத்தரப் பிரதேசத்தில் புதிய விடியலைத் தருமா என்பது சற்று சுருக்கமாகவும் தெளிவாகவும் பார்ப்போம்.
அகிலேஷின் புதிய எழுச்சி
உத்தரப் பிரதேச அரசியலில், சமாஜ்வாதி கட்சி முதன்மை எதிர்க்கட்சியாக மட்டும் இல்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அடுத்தபடியாக, நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு மிகக் கடுமையான சவாலை விடுக்கும் தலைவர்களில் ஒருவராக அகிலேஷ் யாதவ் உருவெடுத்துள்ளார்.
கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் சமாஜ்வாதி 37, காங்கிரஸ் 6 என இண்டியா கூட்டணி 43 இடங்களைக் கைப்பற்றின. மாறாக என்.டி.ஏ கூட்டணி 36 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. பாஜக மத்தியில் தனிப்பெரும்பான்மையை இழக்க உத்தரப் பிரதேச தேர்தல் முடிவுகளே பிரதான காரணமாக அமைந்தன.
குறிப்பாக, அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நடந்த சில மாதங்களிலேயே, அயோத்தியை உள்ளடக்கிய ஃபைசாபாத் தொகுதியில் சமாஜ்வாதி பெற்ற வெற்றி, பாஜகவின் அரசியல் பிம்பத்துக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
உண்மையான பரீட்சை எப்போது?
2027-இல் வரவிருக்கும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் அகிலேஷுக்கு மிகப் பெரிய சவாலாகும். தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத ஒரு சூழலில், முதல்வர் யோகி ஆதித்யநாத் மிகவும் வலிமையான ஒரு தலைவராக உருவெடுத்துள்ளார். அதேநேரம், தற்போதைய அரசு மீதான விமர்சனங்களுக்கு என்.சி.ஆர்.பி (NCRB) வெளியிட்ட குற்றப் புள்ளிவிவரங்கள், எதிர்க்கட்சிகளுக்குப் பெரிய ஆயுதமாக மாறியுள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி ஆட்சியின்போது 2017-ம் ஆண்டில் தீவிரக் குற்றங்கள் 64,450 ஆக இருந்த நிலையில், 2024-ல் பாஜக ஆட்சியில் அது 85,647 ஆக உயர்ந்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களும் சமாஜ்வாதி ஆட்சியில் 56,011-ல் இருந்து பாஜக ஆட்சியில் 66,398 ஆக அதிகரித்துள்ளன.
அதேவேளையில், பிடிஏ வியூகத்தை அகிலேஷ் மிகத் தீவிரமாகக் கட்டமைத்து வருகிறார். யாதவ் - முஸ்லிம் வாக்குகளை மட்டும் நம்பியிருக்காமல், குர்மி, பாசி போன்ற பிற சமூகங்களையும் ஒருங்கிணைத்து வருகிறது சமாஜ்வாதி கட்சி.
பூத் கமிட்டிகளை சீரமைத்தல் மற்றும் பெண்களுக்கு ஆண்டுக்கு 40,000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் ‘ஸ்த்ரீ சம்மான் சம்ருத்தி யோஜனா’, பெண்கள் பாதுகாப்பு போன்ற வாக்குறுதிகளுடன் சமாஜ்வாதி களமிறங்கியுள்ளது.
இருந்தபோதிலும்கூட, கடந்த கால சமாஜ்வாதி ஆட்சிக் காலத்தின் ‘சட்டம் செயல்படாச் சூழல்’ (Lawlessness) என்ற பிம்பத்தை உடைப்பது அகிலேஷுக்கு மிகவும் அவசியமாகிறது. இதைத்தான் இன்றுவரை பாஜக கையில் எடுத்து அகிலேஷை முடக்குகிறது.
டிம்பிளின் வருகை எப்படியிருக்கும்?
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருக்கு ஆதரவு, தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் விவகாரங்களில் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தது முதல், லக்னோவில் பெண்களுக்கான நலத்திட்டங்களை அறிவித்தது வரை டிம்பிள் யாதவ் தீவிரமாகச் செயல்படுகிறார். இது சமாஜ்வாதி மீது பாஜக காலம் காலமாக வைக்கும் குற்றச்சாட்டுகளின் போக்கையே முற்றிலும் மாற்றியுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தின் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்த டிம்பிள், யாதவ் அல்லாத பிற சாதியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் ஆதரவும் இவருக்குக் கிடைக்கிறது. யோகி ஆதித்யநாத் அரசின் நலத்திட்டங்களால் பலனடைந்த பெண் வாக்காளர்களைத் தன் பக்கம் இழுக்க, மென்மையான அழுத்தமான ‘சாஃப்ட்-பவர்’ பிரச்சாரகராக டிம்பிள் இருப்பார்.
முதல்முறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பாஜக மிகுந்த செல்வாக்கு கொண்டுள்ளது. ஆனால், சமீபத்தில் நடந்த போராட்டங்கள் ‘ஜென்ஸீ’ (Gen Z) தலைமுறையினரின் ஒரு பிரிவினர் மத்தியில் அரசியல் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியதாகவே பார்க்கப்படுகிறது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ‘அட்லஸ் 2024’ வெளியீட்டின்படி, 2024-ம் ஆண்டு மே 20-ம் தேதி நிலவரப்படி, உத்தரப் பிரதேச வாக்காளர்களில் 21.19% பேர் 18 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள். அதாவது, ஐந்து வாக்காளர்களில் ஒருவர் இந்த வயதினர். ஆதலால் 2027 உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், இளைஞர்களின் வாக்கு தீர்க்கமான அரசியல் சக்தியாக மாறக்கூடும்.
வலுவான போட்டியாளர் பாஜக
10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக, மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க உத்தரப் பிரதேச தேர்தலை முன்னோட்டமாகப் பார்க்கும். மிகவும் வலிமையான அமைப்பு ரீதியான கட்டமைப்பு, பிரதமர் மோடியின் செல்வாக்கு, யோகி ஆதித்யநாத்தின் தனிப்பட்ட ஈர்ப்பு மற்றும் தேர்தல் கூட்டணிகள் ஆகியவை பாஜகவுக்கு மிகப் பெரிய பலமாக உள்ளன.
எனவே, 2027 தேர்தல் என்பது வெறும் அகிலேஷ் மற்றும் ஆதித்யநாத் ஆகியோருக்கு இடையிலான போட்டியாக மட்டும் இருக்காது. மாறாக, உத்தரப் பிரதேசத்தின் பெண்கள் மற்றும் இளம் வாக்காளர்களை எந்த அரசியல் பார்வை மிக நம்பகமான முறையில் சென்றடைகிறது என்பதற்கான போட்டியாக அமையும்.
இரு தரப்பினரையும் வசப்படுத்தி டிம்பிள் வெற்றிபெற்றால், மாநிலத்தின் அடுத்த முதல்வராகவும் அவர் உருவெடுத்தாலும் வியப்பில்லை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
ஆக, 2022-ல் பாஜகவுக்கு இருந்த அசைக்க முடியாத பலம் இப்போது சற்று தளர்ந்துள்ளதை புள்ளிவிவரங்கள் உணர்த்துவதுடன், பாஜகவுக்கு ஓர் எச்சரிக்கையாகவும் அமைகின்றன உத்தரப் பிரதேச 2027 தேர்தல் கள நிலவரங்கள்.