இந்தியா

“அஜித் பவார் மரணம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது” - என்சிபி இணைப்பு குறித்து சுப்ரியா சுலே கருத்து

மோகன் கணபதி

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சியும் இணைவது குறித்த விவாதத்துக்கு அஜித் பவாரின் மரணம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து பாஜக உடன் கூட்டணி அமைத்த அஜித் பவார், தனது தலைமையிலான அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என உரிமை கோரினார். தேர்தல் ஆணையமும் அவரது தரப்புக்கு ஆதரவாக தனது முடிவை அறிவித்தது. இதையடுத்து, சரத் பவார் தலைமையிலான கட்சி, தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) என்ற புதிய பெயரில் செயல்படத் தொடங்கியது. எனினும், இரு கட்சிகளும் ஒன்றிணைவது குறித்து அவ்வப்போது பேசப்பட்டு வந்தது.

தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள சரத் பவாரை, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரான பிரபுல் படேல் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்ததை அடுத்து, இரு கட்சிகள் இணைப்பு குறித்த பேச்சு மீண்டும் எழுந்துள்ளது.

இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) கட்சியின் செயல் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே, “எனது சகோதரர் அஜித் பவார் உயிருடன் இருந்தவரை இரு கட்சிகளின் இணைப்புக்கான சாத்தியமும் உயிர்ப்புடன் இருந்தது. அவரது மரணம், கட்சிகள் இணைப்பு குறித்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.” எனத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர துணை முதல்வராக இருந்த அஜித் பவார், கடந்த ஜனவரி 28-ம் தேதி நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது மனைவி சுனேத்ரா பவார், கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்றார். மேலும், அவர் துணை முதல்வராகவும் பதவியேற்றார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) கட்சியும் இணைய இருப்பதாக பேசப்படுவதில் உண்மை இல்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிர மாநில தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் தாட்கரேவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். “கட்சிகள் இணைப்பு தொடர்பாக எந்த மட்டத்திலும் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. அஜித் பவாரை, பிரபுல் படேல் சந்தித்தது மரியாதை நிமித்தமானது.

தேசிய அரசியலில் 60 ஆண்டு கால அனுபவம் கொண்டவர் சரத் பவார். தற்போது அவருக்கு 86 வயதாகிறது. அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவரது ஆசீர்வாதத்தால்தான் நாங்கள் அரசியலில் பல்வேறு பொறுப்புகளில் இருக்கிறோம். சரத் பவாரின் உடல்நிலை குறித்து விசாரிக்கவே அவரை, பிரபுல் படேல் சந்தித்தார்.

ஆழமான ஆலோசனைக்குப் பிறகே நாங்கள் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தோம். தற்போதும் நாங்கள் அந்தக் கூட்டணியில்தான் இருக்கிறோம். இனியும் அந்தக் கூட்டணியில்தான் இருப்போம்.” என சுனில் தாட்கரே தெரிவித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT