மும்பை: மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதல்வராக, மறைந்த அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
மகாராஷ்டிராவின் துணை முதல்வராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் அஜித் பவார், பாராமதியில் கடந்த 28-ம் தேதி நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் பாராமதியில் 29-ம் தேதி தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் அஜித் பவாரின் சித்தப்பா சரத் பவார், மத்திய, மாநில அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பாராமதியில் நீரா - கர்ஷா நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நேற்று முன்தினம் அஸ்தி கரைக்கப்பட்டது.
அஜித் பவார் மறைவை அடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியை (என்சிபி) அவரது மனைவியும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுனேத்ரா பவார் (62) வழிநடத்த வேண்டும். துணை முதல்வராக அவர் பொறுப்பேற்க வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் வலியுறுத்தினர்.
இந்த கோரிக்கையை சுனேத்ரா பவார் ஏற்றுக் கொண்டார். நேற்று மதியம் நடைபெற்ற என்சிபி கட்சிக் கூட்டத்தில் என்சிபி சட்டப்பேரவை கட்சித் தலைவராக சுனேத்ரா பவார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்த கடிதம் உடனடியாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் வழங்கப்பட்டது. அவர் இதை ஆளுநர் ஆச்சார்ய தேவவ்ரத்துக்கு அனுப்பினார்.
இதையடுத்து, மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பதவியேற்க சுனேத்ராவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். தலைநகர் மும்பையில் உள்ள லோக்பவனில் நேற்று மாலை 5 மணிக்கு நடந்த நிகழ்வில், மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதல்வராக சுனேத்ரா பவார் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆச்சார்ய தேவவ்ரத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
சுனேத்ராவுக்கு வருவாய், விளையாட்டு, இளைஞர் நலன், சிறுபான்மையினர் மேம்பாடு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அஜித் பவாரிடம் ஏற்கெனவே இருந்த நிதித் துறையை முதல்வர் பட்னாவிஸ் கவனிப்பார்.
பிரதமர் மோடி வாழ்த்து: சுனேத்ராவுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதல்வராக பொறுப்பேற்ற சுனேத்ரா பவாருக்கு வாழ்த்துகள். மாநில மக்களின் நலனுக்காக அயராது உழைத்து, அஜித் பவாரின் தொலைநோக்கை நிறைவேற்றுவார் என நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பாராமதியில் என்சிபி (சரத் பவார் அணி) தலைவர் சரத் பவார் அளித்த பேட்டியில், ‘‘இரண்டாக உடைந்த என்சிபி கட்சிகள் மீண்டும் இணைய வேண்டும் என்பது அஜித் பவாரின் ஆசை. இதற்கான அறிவிப்பை பிப்.12-ல் வெளியிடவும் திட்டமிட்டிருந்தார். துணை முதல்வராக சுனேத்ரா பதவியேற்பது குறித்து எனக்கு தெரியாது. அதுபற்றி என்னிடம் ஆலோசிக்கவும் இல்லை” என்றார்.
கட்சிகள் இணையுமா? - அஜித் பவார் அணியை சேர்ந்த என்சிபி கட்சி தலைவர்களுக்கு, சரத் பவார் அணியுடன் இணைய ஆர்வம் இல்லாதது போல தெரிகிறது. அஜித் பவார் வாரிசாக சுனேத்ரா இருப்பதையே அவர்கள் விரும்புகின்றனர். இதனால், கட்சியின் பிரிவுகள் இணைய வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் இதையே தெரிவித்துள்ளார்.
சுனேத்ராவின் அரசியல் பயணம்: சுனேத்ரா பவார் கடந்த 2024 மக்களவை தேர்தலில் பாராமதி தொகுதியில் போட்டியிட்டதன் மூலம் அரசியலில் நுழைந்தார். ஆனால், என்சிபி (சரத் பவார் அணி) சார்பில் போட்டியிட்ட தனது நெருங்கிய உறவினர் சுப்ரியா சுலேவிடம் தோல்வியடைந்தார். பிறகு, மாநிலங்களவை எம்.பி.யானார். கணவர் அஜித் பவார் மறைவை அடுத்து துணை முதல்வர் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.