இந்தியா

“ஓட்டு இல்லையென்றால் நிதி இல்லை” - சர்ச்சை பேச்சு குறித்து அஜித் பவார் விளக்கம்!

டெக்ஸ்டர்

எங்கள் வேட்பாளர்களை நீங்கள் நிராகரித்தால் உங்களுக்கான நிதியை நான் நிராகரித்து விடுவேன் என்று தேர்தல் பரப்புரையின் போது அஜித் பவார் பேசியது சர்ச்சையான நிலையில், தற்போது அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மாலேகான் நகர் பஞ்சாயத்து தேர்தலுக்கான பரப்புரையின் போது பேசிய மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், “18 தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களையும் நீங்கள் தேர்ந்தெடுத்தால், நிதி பற்றாக்குறை ஏற்படாமல் நான் பார்த்துக் கொள்வேன்.

நான் வாக்குறுதியளித்ததை உங்களுக்கு வழங்குவேன் என உறுதியளிக்கிறேன். ஆனால் நீங்கள் அவர்களை நிராகரித்தால், நானும் உங்களை நிராகரிப்பேன். உங்களிடம் வாக்குகள் உள்ளன, என்னிடம் நிதி உள்ளது” என்று பேசினார்.

அஜித் பவாரின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்கட்சிகள் அவரது பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. அஜித் பவார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் அவர் மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன.

இந்த நிலையில் தன்னுடைய பேச்சு குறித்து விளக்கமளித்துள்ள அஜித் பவார், “சமீபத்தில், பிஹாரில் தேர்தல்கள் நடைபெற்றன. எதிர்க்கட்சிகள் அங்கு என்ன சொன்னார்கள்? ‘எங்களுக்கு வாக்களியுங்கள், நாங்கள் உங்களுக்கு வேலைகளைத் தருவோம்’ என்று அவர்கள் சொன்னார்கள், இல்லையா? தேர்தல்களின் போது, ​​அனைவரும் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவார்கள், ஆனால் இவை தேர்தல் நேரத்தில் மட்டுமே கூறப்படும் விஷயங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT