இந்தியா

‘‘அமெரிக்க ஒப்பந்தத்தால் விவசாயம், பால் பொருட்களுக்கு பாதிப்பு இருக்காது’’ - பியூஷ் கோயல் உறுதி

மோகன் கணபதி

புதுடெல்லி: இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம், இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்துக்கான ஒரு மைல்கல் என தெரிவித்துள்ள மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவில் உற்பத்தியாகும் விவசாய பொருட்களுக்கும், பால் பொருட்களுக்கும் எந்த பாதிப்பும் இருக்காது” என உறுதி அளித்துள்ளார்.

இந்திய - அமெரிக்க வர்த்தகம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல், ‘‘இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நேற்றிரவு இறுதி செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம், நாட்டின் 140 கோடி மக்களுக்கும், குறிப்பாக விவசாயிகள், மீனவர்கள், இளைஞர்கள், பெண்களுக்கு ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டு வரும்.

          

இந்த ஒப்பந்தம் தொடர்பாக நாங்கள் நாடாளுமன்றத்தில் பேச விரும்பினோம். ஆனால், ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளான திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகியவையும் நாடாளுமன்றத்தில் மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டதைப் பார்த்தோம்.

விவசாயம் மற்றம் பால்வளம் ஆகிய இரு துறைகள் விஷயத்தில் பிரதமர் எப்போதும் மிகுந்த கவனத்தை செலுத்தி, அவர்களின் நலன்களை கவனித்து, அவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் கிடைப்பதை உறுதி செய்ய தொடர்ந்து உழைத்துள்ளார். அவர்களின் நலன்களில் சமரசம் செய்துகொள்ள பிரதமர் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. அவை மட்டுமல்ல, இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் முக்கிய துறைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பதை முழு நாடும் புரிந்து கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இது வெறும் வர்த்தக ஒப்பந்தம் அல்ல. இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்திற்கான ஒரு மைல்கல். இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்வதைக் காண்பதற்கு இது ஒரு நல்ல அறிகுறி.

இந்த ஒப்பந்தம் இந்தியர்களின் நலன்களைப் பாதுகாக்கும். ஜவுளி, ஆடைகள், பிளாஸ்டிக், வீட்டு அலங்காரம், தோல் மற்றும் காலணி, கற்கள் மற்றும் நகைகள், ரப்பர் பொருட்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதிக்கு மிகப் பெரிய வாய்ப்புகள் உருவாகும்’’ என தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிப்பு 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைந்தது மிகவும் நல்ல செய்தி. இந்தியாவின் ஏற்றுமதி இனி அதிகரிக்கும்’’ என தெரிவித்துள்ளார்.

வருவாய்த் துறை செயலாளர் அரவிந்த் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ‘‘இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையேயான வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்தும்; ஆழப்படுத்தும். இது அமெரிக்க சந்தையில் நமது தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தித் துறைகளுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கும். மேலும், உயர்மட்ட தொழில்நுட்ப துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்புக்கு இது ஊக்கமளிக்கும்’’ என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வரி மற்றும் வரி இல்லாத தடைகளை இந்தியா குறைக்கும் என்ற அமெரிக்காவின் அறிவிப்பு தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி காங்கிரஸ் எம்பி கே.சி.வேணுகோபால் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

மற்றொரு காங்கிரஸ் எம்பி ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, ‘‘அமெரிக்க - இந்திய வர்த்தக ஒப்பந்தம் குறித்து மாநிலங்களவையில் விவாதம் நடத்தப்பட வேண்டும். இதில் இந்திய விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது’’ என குற்றம் சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT