மத்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு முதன்முறையாக நாடாளுமன்றத்துக்கு வந்த தர்மேந்திர பிரதான் எம்.பி-க்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதை எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்தன.
‘தர்மேந்திர பிரதான் ஜிந்தாபாத்’
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சிஜேபி போராட்டத்தின் எதிரொலியாக, மத்திய கல்வி அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் கடந்த சனிக்கிழமை ராஜினாமா செய்தார். அவர் பதவி விலகலுக்குப் பின்னர் திங்கள்கிழமை நாடாளுமன்றம் திரும்பினார்.
மகர் துவார் நுழைவாயில் வழியாக நாடாளுமன்றம் வந்த பிரதானுக்கு பாஜக, அதன் கூட்டணி எம்.பி.க்கள் ‘தர்மேந்திர பிரதான் ஜிந்தாபாத்’ என உற்சாகமாக முழக்கமிட்டு வரவேற்றனர். நெகிழ்ச்சியில் அவரும் சக எம்.பி.க்களை அவர் கைகூப்பி வணங்கினார். பாரம்பரிய தொப்பி, சால்வை அணிவித்து அவரை வரவேற்றனர்.
“தனிப்பட்ட முறையில் எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லாமல் ஒரு மத்திய அமைச்சர் பதவி விலகியது அநேகமாக இதுவே முதல் முறை,” என்று தேஜகூ எம்.பி. ஒருவர் நெகிழ்ந்தார்.
பிரதானுக்கான வரவேற்புகள், அமைச்சர் பதவியை தான் பிரதான் இழந்திருக்கிறாரே தவிர, கட்சியில் அவருக்கான பிரதான இடம், கூட்டணிக் கட்சிகள் இடையே அவருக்கான மதிப்பு சற்றும் குறையவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த நிகழ்வுகள் அமைந்ததாகக் கொள்ளலாம்.
அதேநேரத்தில், நாடு தழுவிய போராட்டங்களின்போது மாணவர்கள் மீதான காவல் துறையின் பலப்பிரயோகம் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் எதிர்க்கட்சிகள், பிரதானுக்கான வரவேற்பையும் விமர்சிக்கத் தவறவில்லை.
பிரதான் வருகைதந்த மகர் துவார் வாயில் அருகே தான் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தன. அதனால் அவருக்கான வரவேற்பு உடனடியாக எதிர்க்கட்சிகள் பார்வையை உறுத்தியிருக்கலாம்.
முன்னதாக, மாணவர்களுக்கு நீதி கேட்டு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தலைமையில் திங்கள்கிழமை காலையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
“அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான காவல் துறை நடவடிக்கைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று அவர்கள் கோரினர்.
மேலும், “டெல்லியில் மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகளும், பிஹாரில் போராடிய மாணவர்கள் மீது ஏகே-47 ரகத் துப்பாக்கிகளும் பயன்படுத்தப்பட்டன. மாணவர்களை தாக்கி நசுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள், மாணவர்கள் மீது அல்ல” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் காட்டமாகத் தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில், தர்மேந்திர பிரதானுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்து பாஜகவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.
“ஒரு பெரும் நெருக்கடி காரணமாக ராஜினாமா செய்த ஒருவரை பாஜக கொண்டாடுவதா?” என்று காத்திரமாகக் குரல் எழுப்பியுள்ளன.
குறிப்பாக, காங்கிரஸ் எம்.பி.ரேணுகா சவுத்ரி, “பாஜகவின் இந்த நடவடிக்கை ஆச்சரியம் அளிக்கவில்லை. இது, இந்த அரசின் அரசியல் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கிறது,” என்றார்.
‘நான் ஒரு தெருப் போராளி’ -
மணி 12.30 இருக்கும்போது, காங்கிரஸ் எம்பி ஜெயராம் ரமேஷை தர்மேந்திர பிரதான் மகர் நுழைவுவாயில் அருகே சந்தித்தார். எதிர்ப்புகளைக் கடந்து இருவரும் ஒருவொருக்கொருவர் கைகுலுக்கிக் கொண்டனர்.
அப்போது ஜெய்ராம் ரமேஷ், “இப்படி நடப்பது இயல்புதான்” எனக் கூற, அதற்கு தர்மேந்திர பிரதான், “ஒன்றும் நடந்துவிடவில்லை. நான் ஒரு தெருப் போராளி. குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து செயல்படும் செயல்பாட்டாளர் அல்ல” எனத் தெரிவித்தது கவனம் பெற்றுள்ளது. இரண்டு எதிரெதிர் கொள்கை கொண்ட கட்சிகளின் மூத்த தலைவர்கள், இன்று சந்தித்து பேசிக் கொண்டது நாடாளுமன்ற வளாகத்தின் இன்றைய முக்கிய தருணமாகக் கருதப்படுகிறது.
மேலும், அப்போது பிரதான் வாஜ்பாய் காலத்தைப் பற்றிய ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார். முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் ஆட்சி குறித்து ஜெய்ராம் ரமேஷ் எழுதிய கட்டுரையை படித்த பிறகு அவரை சந்திக்க விரும்பியதாக பிரதான் நினைவுகூர்ந்தார். தான் எம்.பி ஆன பிறகு, இறுதியில் ரமேஷை சந்தித்ததாகவும், அப்போது அவர் வர்ததக இணை அமைச்சராக இருந்ததாகவும், தனது ஒடிசா தொகுதியில் விளையும் மிளகாய்க்கு சிறந்த சந்தைப்படுத்தல் ஆதரவு வேண்டும் என அவரிடம் வலியுறுத்தவே அந்தச் சந்திப்பு என்றும் குறிப்பிட்டார்.
ஓர் இறுக்கமான சூழலுக்கு இடையே, நாடாளுமன்ற தொடர் முடகத்துக்கு இடையே ஒரு சுவாரஸ்ய நிகழ்வாக இது அமைந்துள்ளது.
ஒருபக்கம் பிரதான் ராஜினாமாவை கொண்டாடும் சிஜேபியினர், இன்னொரு பக்கம் பிரதான் விலகல் மட்டும் போதாது என்று அதை வைத்து அரசியலை நீட்டிக்கும் எதிர்க்கட்சிகள் என்று செய்திகள் அலைவகுக்க, பிரதானுக்காக பிரத்யேக ப்ளானுக்கு பாஜக தயாராவதாகக் கூறப்படுகிறது.
அதாவது, பிஹார் சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக பொறுப்பாளராக செயல்பட்ட தர்மேந்திர பிரதான், அம்மாநிலத்தில் என்டிஏ ஆட்சி தொடர்வதை உறுதிப்படுத்தினார். மேலும், மேற்கு வங்க பிரச்சாரத்திலும் முக்கிய பங்கு வகித்து, கடந்த மே மாதம் அம்மாநிலத்தில் முதல்முறையாக பாஜக ஆட்சி அமைய அவரும் ஒரு முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு பாஜகவில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.