இந்தியா

60 நாட்கள் இழுபறிக்குப் பிறகு கர்நாடகாவில் 19 எம்எல்ஏ-க்கள் அமைச்சர்களாக பதவியேற்பு

இடம் கிடைக்காத அதிருப்தியில் 2 எம்எல்ஏ-க்கள் ராஜினாமா

செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடகாவில் முதல்​வ​ராக இருந்த சித்​த​ராமையா கடந்த மே மாதம் தனது பதவியை ராஜினாமா செய்​தார். இதையடுத்து ஜூன் 3-ம் தேதி டி.கே.சிவகுமார் முதல்​வ​ராக பொறுப்​பேற்​றார். அவருடன் துணை முதல்​வ​ராக பரமேஷ்வரும், அமைச்​சர்​களாக 12 பேரும் பதவி ஏற்​றனர்.

அமைச்சரவை​யில் காலி​யாக இருந்த 20 இடங்​களை கைப்​பற்ற 50-க்​கும் மேற்​பட்ட காங்​கிரஸ் எம்எல்ஏக்கள் போட்​டிப் போட்​டனர். முதல்​வர் டி.கே.சிவகு​மார், மாநில தலை​வர் பி.கே.ஹரிபிர​சாத், முன்​னாள் முதல்​வர் சித்​த​ராமையா ஆகியோர் இரு​முறை டெல்லிக்கு சென்று காங்​கிரஸ் தேசி​யத் தலை​வர் மல்​லி​கார்​ஜூன கார்​கே, மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்​தி, அமைப்பு செய​லா​ளர் கே.சி. வேணுகோ​பால், மேலிடப் பொறுப்பாளர் ரந்​தீப் சிங் சுர்​ஜே​வாலா ஆகியோரை சந்​தித்து 3 சுற்​றுகள் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். நீண்ட இழுபறிக்கு பின்​னர், 60 நாட்​களுக்கு பிறகு நேற்று 20 பேர் கொண்ட அமைச்​சரவை பட்டியலை காங்​கிரஸ் மேலிடம் வெளி​யிட்​டது.

இதையடுத்​து, பெங்​களூரு​வில் உள்ள லோக் பவனில் ஆளுநர் தாவர்​சந்த் கெலாட் நேற்று மாலை 5 மணிக்கு சிவ​ராஜ் தங்​கடகி, ஜமீர் அஹமது கான், மது பங்​காரப்​பா, சந்​தோஷ் லாட், செலு​வ​ராய​சாமி, ரிஸ்​வான் அர்​ஷத் உள்​ளிட்ட 19 பேர் அமைச்​சர்​களாக பதவி​யேற்​றனர்.

அமைச்​சர​வை​யில் இடம் கிடைக்​காத தன்​வீர் சேட், தினேஷ் குண்டு​ராவ் உள்​ளிட்ட 10-க்​கும் மேற்​பட்ட எம்​எல்​ஏக்​களின் ஆதரவாளர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அமைச்​சர் பதவி கிடைக்​காத​தால் அதிருப்தி அடைந்த விஜயபுரா தொகுதி எம்​எல்ஏ யஷ்வந்த்​ராய கவு​டா, பேலூர் தொகுதி எம்​எல்ஏ கோபால​கிருஷ்ணா ஆகியோர் தங்​களது பதவியை ராஜி​னாமா செய்துள்ளனர்.

இதுகுறித்​து, கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மார், “அமைச்சரவையில் காலி​யாக இருந்த 20 இடங்​களுக்கு 60 பேர் ஆசைப் பட்​டனர். எல்​லோரை​யும் அமைச்​சர​வை​யில் சேர்க்க முடியாது. வரும் காலங்​களில் மற்​றவர்​களுக்​கும் வாய்ப்பு கொடுக்​கப்​படும். 2013-ல்​ எனக்​கு அமைச்​சர்​ பத​வி கிடைக்கவில்லை'' என்​றார்​.

SCROLL FOR NEXT