இந்தியா வந்துள்ள அல்ஹாஜ் நூருதின் அசிசியை, வரவேற்ற வெளியுறவு அமைச்சக உயரதிகாரி

 
இந்தியா

ஆப்கனிஸ்தான் வர்த்தக அமைச்சர் அசிசி இந்தியா வருகை

ஆனந்த்

புதுடெல்லி: ஆப்கன் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாகி கடந்த மாதம் இந்தியா வந்த நிலையில், அந்நாட்டின் வர்த்தக அமைச்சர் அல்ஹாஜ் நூருதின் அசிசி புதுடெல்லி வந்துள்ளார்.

ஐந்து நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அல்ஹாஜ் நூருதின் அசிசியை, வெளியுறவு அமைச்சக உயரதிகாரி ஒருவர் விமான நிலையத்தில் வரவேற்றார்.

அல்ஹாஜ் நூருதின் அசிசியின் வருகை தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கனிஸ்தான் தொழில்துறை மற்றும் வர்த்தக அமைச்சர் அல்ஹாஜ் நூருதின் அசிசிக்கு அன்பான வரவேற்பு. இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவதே இந்த பயணத்தின் முக்கிய நோக்கம் என தெரிவித்துள்ளார்.

தனது இந்த பயணத்தில், இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி 2025-ஐ ஆப்கன் அமைச்சர் பார்வையிடுவார். மேலும், இந்திய உயர் அதிகாரிகளை குறிப்பாக தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறையின் உயர் அதிகாரிகளை அவர் சந்திக்க உள்ளார்.

ஆப்கனிஸ்தானில் தலிபான்கள் கடந்த ஆகஸ்ட் 2021ல் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, அந்த அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு வருவது இது இரண்டாவது நிகழ்வு.

முன்னதாக, கடந்த மாதம் ஆப்கன் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாகி ஆறு நாள் பயணமாக கடந்த மாதம் இந்தியா வந்தார். அப்போது அவர், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அமிர் கான் முட்டாகியின் வருகையை அடுத்து, ஆப்கனிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தொழில்நுட்ப மையம், இந்திய தூதரகமாக தரம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT