புதுடெல்லி: இந்திய கடற்படையின் அடுத்த தலைமுறை ஏவுகணை கப்பல் திட்டத்திற்காக, 18 அதிநவீன ‘கமேவா' வாட்டர்ஜெட் உந்துவிசை அமைப்புகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை நார்வேயைச் சேர்ந்த கோங்ஸ்பெர்க் மேரிடைம் நிறுவனம் பெற்றுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய கடற்படைக்கு தேவையான வாட்டர்ஜெட் கருவிகளை வழங்க நார்வே நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
வழக்கமான கப்பல்களில் காணப்படும் விசிறி போன்ற புரொப்பல்லர் அமைப்பிற்கு மாற்றாக, இந்த வாட்டர்ஜெட் தொழில்நுட்பம் நீரை உள்ளிழுத்து, அதிக வேகத்தில் வெளியேற்றுவதன் மூலம் கப்பலை இயக்கும்.
இதன் மூலம் கப்பல்கள் எதிரிகளின் ரேடார் பார்வையில் படாமல் அதிவேகமாகச் செல்லவும், கடலில் மிக லாவகமாகத் திரும்பவும் முடியும். இந்தக் கப்பல்களைக் கட்டி வரும் கொச்சி கப்பல் கட்டும் தளத்துடன் இணைந்து நார்வே நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கொச்சி கப்பல் கட்டும் தளத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "ஏற்கனவே பல வர்த்தக ரீதியான திட்டங்களில் இந்நிறுவனம் எங்களுக்கு நம்பகமான கூட்டாளியாக இருந்துள்ளது. இந்த முக்கியத் திட்டத்திற்குத் தேவையான தரமான மற்றும் நுணுக்கமான தொழில் நுட்பக் கருவிகளை அவர்கள் வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.