புதுடெல்லி: மேற்கு வங்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, பிரதமர் மோடியிடம் கோரிக்கை கடிதம் ஒன்றை அளித்தார். அதில் ஆதிர் ரஞ்சன் கூறியிருப்பதாவது:
பெங்காலி மொழி பேசும் மக்கள் மீது பல்வேறு மாநிலங்களில் தாக்குதல் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் புலம்பெயர்ந்த பெங்காலி மக்கள் மீது தாக்குதல் நடைபெறுகிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு, தாக்குதலை நிறுத்த வேண்டும்.
இதுபோன்ற தாக்குதல்கள் மேற்கு வங்கத்தில் இனக் கலவரத்துக்கு வழிவகுக்கும். பெங்காலி மொழி பேசுபவர்கள் வங்கதேசத்தினர் என்ற தவறான புரிதல் அரசு நிர்வாகத்தினரிடம் பரவலாக உள்ளது. அதுதான் இங்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. பெங்காலி பேசுபவர்களை சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று நினைத்து தாக்குதல் நடைபெறுவதை தடுக்க வேண்டும். இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளார்.