குவாஹாட்டி: அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்காக, அதானி குழுமம் சார்பில் ரூ.11 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
அசாமில் பெய்த கனமழையால் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சாலைகள், அணைகள், விவசாய நிலங்கள் மற்றும் பொதுச் சொத்துகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், மாநிலத்தின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்கு உதவும் வகையில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, அசாம் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.11 கோடி ஆன்லைன் மூலம் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "விளம்பரத்தை எதிர்பார்க்காமல் அமைதியாகவும், கருணையோடும் உதவி செய்த தொழிலதிபர் அதானிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், அதானி நிதி உதவி மட்டுமன்றி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான பிற பொருட்களையும் திரட்டி வருகிறார். மேலும், பெறப்படும் ஒவ்வொரு ரூபாயும் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்காக மிகவும் பொறுப்புடனும், வெளிப்படைத்தன்மையுடனும் பயன்படுத்தப்படும்" என கூறியுள்ளார்.