கர்நாடக முதல்வர் சித்தராமையா 
இந்தியா

“கருணையோடு செயல்படுங்கள்” - பெங்களூரு வீடுகள் இடிப்பு விவகாரத்தில் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் அறிவுரை

வெற்றி மயிலோன்

பெங்களூரு: பெங்களூருவின் பயெலஹங்கா அருகே உள்ள கோகிலு பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோருடன் பேசினார். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பயெலஹங்கா அருகே உள்ள கோகிலு கிராமத்தில் அரசின் கழிவுகள் கொட்டும் தளம் உள்ள பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுமார் 200 வீடுகள் சமீபத்தில் இடிக்கப்பட்டன. அந்த வீடுகளில் வசித்த மக்கள் தற்போது வீடற்ற நிலையில் உள்ளனர். இதனை பல்வேறு அரசியல் கட்சிகளும் கடுமையாக கண்டித்துள்ளன. மேலும், இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடியாகவும் மாறியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த முதல்வர் சித்தராமையா, “கோகிலு படாவனே பகுதியில் உள்ள நிலம் மனிதர்கள் வசிக்கத் தகுதியற்ற ஒரு கழிவு கொட்டும் தளமாக இருந்தது. அந்த இடத்தை ஆக்கிரமித்திருந்த குடும்பங்களை வேறு இடத்துக்குச் செல்லுமாறு மீண்டும் மீண்டும் அறிவிப்புகள் வழங்கப்பட்டது. ஆனால் எந்தப் பதிலும் இல்லாததால், வெளியேற்றம் தவிர்க்க முடியாததாகிவிட்டது. அந்த நிலத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் உள்ளூர்வாசிகள் அல்ல, புலம்பெயர் தொழிலாளர்கள். இருப்பினும் மனிதாபிமான கண்ணோட்டத்தில் பொருத்தமான வீட்டு வசதிகள் உறுதி செய்யப்படும்” என்று கூறினார்.

இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ பெங்களூருவின் கோகிலு கிராமத்தில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் இடிக்கப்பட்டது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் சிவகுமார் ஆகியோரிடம் பேசினேன்.

இத்தகைய நடவடிக்கைகள் மனித பாதிப்புகளை மையமாகக் கொண்டு, மிகுந்த எச்சரிக்கை, உணர்திறன் மற்றும் கருணையுடன் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஆழ்ந்த கவலையை அவர்களிடம் தெரிவித்தேன்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தாங்களே நேரடியாகப் பேசி, குறைகளைத் தீர்ப்பதற்கு ஒரு பொருத்தமான வழிமுறையை ஏற்படுத்துவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு மற்றும் நிவாரணம் வழங்குவதை உறுதி செய்வதாகவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்’ எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT