இந்தியா

டெல்லி பல்கலை. மாணவர் தேர்தல்: தலைவர் உட்பட 3 பதவிகளை கைப்பற்றியது ஏபிவிபி

துணைத் தலைவராக வெற்றி பெற்ற சுயேட்சை

மோகன் கணபதி

புதுடெல்லி: டெல்லி பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர் ஆகிய மூன்று முக்கிய பதவிகளை ஏபிவிபி மாணவர் அமைப்பு கைப்பற்றியுள்ளது.

டெல்லி பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் பதிவான வாக்குகள் 20 சுற்றுக்களாக எண்ணப்பட்டன. இதையடுத்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, தலைவர், செயலாளர், இணைச் செயலாளர் ஆகிய மூன்று முக்கிய பதவிகளை சங் பரிவார் அமைப்பான அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத் (ஏபிவிபி) கைப்பற்றியுள்ளது.

தலைவராக யாஷ் தபாஸும், செயலாளராக ரியா சாவ்ரியும், இணைச் செயலாளராக லக்‌ஷய ராஜ் சிங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். துணைத் தலைவராக சுயேட்சை வேட்பாளர் தீபான்ஷு ஷோகீன் வெற்றி பெற்றுள்ளார்.

தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட யாஷ் தபாஸ் 24,576 வாக்குகளைப் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான என்எஸ்யுஐ-யின் விஜய் சங்கர் மீனாவை 2,000+ வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். செயலாளராக தேர்வாகியுள்ள ரியா சாவ்டி 21,650 வாக்குகளையும், இணைச் செயலாளராக தேர்வாகியுள்ள லக்‌ஷய ராஜ் சிங் 16,615 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

துணைத் தலைவர் பதவிக்குப் சுயேட்சையாகப் போட்டியிட்ட என்எஸ்யுஐ-ன் முன்னாள் உறுப்பினரான தீபான்ஷு ஷோகீன், 30,615 வாக்குகளைப் பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஏபிவிபியின் இஷு மவுர்யா 16,910 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். என்எஸ்யுஐ-ன் வீர் சத்ரத் 4,313 வாக்குகளைப் பெற்றார்.

டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, வெற்றி பெற்ற வேட்பாளர்களும், அவர்களது ஆதரவாளர்களும் பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளேயோ அல்லது வெளியேயோ வெற்றி ஊர்வலங்களை நடத்த வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு பேசிய யாஷ் தபாஸ், அனைத்து மாணவர்களுக்கும் விடுதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே எங்கள் முன்னுரிமையாக இருக்கும் என்று தெரிவித்தார்.

தேர்தலில் முறைகேடு நடந்ததாக என்எஸ்யுஐ எழுப்பிய குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்த அவர், ஜென்ஸீ மாணவர்களை யாரும் எளிதில் ஏமாற்ற முடியாது என்றார்.

SCROLL FOR NEXT