புதுடெல்லி: பாகிஸ்தான் எப்-16 போர் விமானத்தை வீழ்த்திய குரூப் கேப்டன் அபிநந்தன் வர்த்தமான், இந்திய விமானப்படையில் இருந்து விலகி கோவாவை சேர்ந்த ‘பிளை 91’ என்ற தனியார் விமான நிறுவனத்தில் இணைந்துள்ளார்.
2019 பிப்ரவரி 14 புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்தியா பாகிஸ்தானின் பாலகோட் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. மறுநாளே இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் போர் விமானங்களை, அன்றைய விங் கமாண்டர் அபினந்தன் தனது மிக்-21 பைசன் விமானத்தில் சென்று துணிச்சலுடன் எதிர்கொண்டார்.
தொழில்நுட்ப ரீதியிலும் எண்ணிக்கையிலும் எதிரி விமானங்கள் பலமாக இருந்தபோதிலும், பாகிஸ்தானின் எப் -16 விமானத்தை அவர் சுட்டு வீழ்த்தினார். இருப்பினும், எதிரியின் ஏவுகணை தாக்கியதால் விமானம் சேதமடைந்து, அபிநந்தன் பாகிஸ்தான் பகுதியில் தரையிறங்க நேரிட்டது.
பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட அவர், இந்தியாவின் பலத்த ராஜதந்திர அழுத்தங்கள் காரணமாக 60 மணி நேரத்தில் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
அவரது ஒப்பற்ற வீரத்தையும் தியாகத்தையும் கவுரவிக்கும் வகையில், இந்தியாவின் மூன்றாவது உயரிய போர்க்கால விருதான ‘வீர் சக்ரா’ அவருக்கு வழங்கப்பட்டது. பின்னர் குரூப் கேப்டனாக பதவி உயர்வு பெற்ற அவர், தனது பணிக் காலத்தை நிறைவு செய்து, நடப்பாண்டு மார்ச் 31 அன்று இந்திய விமானப்படையிலிருந்து விலகினார்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் முறையான ஒப்புதல் மற்றும் சான்றிதழ்களைப் பெற்ற பிறகு, கோவாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் ‘பிளை 91’ என்ற தனியார் பயணிகள் விமான நிறுவனத்தில் ஆகஸ்ட் மாதம் விமானியாக இணைந்து தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார்.