சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே
புதுடெல்லி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனர் அபிஜித் திப்கே டெல்லி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 13-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தேசிய கொடியுடன் போராட்டம் நடத்த முயன்ற சிஜேபி செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ், ஒருங்கிணைப்பாளர் அசுதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை 5 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதன் பேரில் இருவரும் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களை விடுவிக்க வேண்டும். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி கனாட் பிளேஸின் மத்திய பூங்காவில் தேசிய கொடியேற்றுவோம் என்று சிஜேபி அறிவித்திருந்தது.
இதற்காக டெல்லியில் உள்ள வீட்டில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே கைது செய்யப்பட்டார். ஜாபர்பூர் கல்யாண் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் மீது பிஎன்எஸ்எஸ் சட்டப்பிரிவு 126, 170 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
டெல்லி மண்டிர் மார்க் பகுதியில் உள்ள சிறப்பு செயல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று பிற்பகல் அபிஜித் திப்கே ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதன்படி ஓராண்டுக்கு சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன் என்ற உறுதிமொழி பத்திரத்தில் திப்கே கையெழுத்திட்டு உள்ளார். மேலும் ரூ.50,000 பிணைத் தொகை செலுத்திய பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.