புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, டெல்லியின் ஜந்தர் மந்தரில் அக்டோபர் 10-ல் நடைபெறவுள்ள போராட்டத்துக்கு முன்னதாக, சிஜேபியின் அபிஜித் திப்கே, அசுதோஷ் ரங்கா உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (SIR) விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி அக்டோபர் 10-ம் தேதி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்தச் சூழலில் சிஜேபி செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “என்னையும், அபிஜித் திப்கே, அசுதோஷ் ரங்கா மற்றும் பிற சிஜேபி தலைவர்களைக் கைது செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இத்தகைய சர்வாதிகார நடவடிக்கைகள் பலனளிக்கும் என்று அரசு நினைத்தால், அது தவறு. இளம் தலைமுறை விழித்துக் கொண்டுள்ளது. நாங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நமது உரிமைகளுக்காகவும் எதிர்காலத்திற்காகவும் தொடர்ந்து போராடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
சிறைவாசத்தையோ அல்லது அதைவிட மோசமானதையோ எதிர்கொள்ள நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம். ஆனால் இது ஒரு பெரிய தவறாக அமையும். இளைஞர்கள் இதைச் சகித்துக்கொள்ள மாட்டார்கள். போராட்டங்கள் தொடர வேண்டும்.
அக்டோபர் 10 முதல் மக்கள் மிகப்பெரிய அளவில் ஒன்றுகூடுவதை இந்திய மக்கள் உறுதி செய்ய வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அபிஜித் திப்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், “எத்தனை பேரைத்தான் கைது செய்வீர்கள் அமித் ஷா? அக்டோபர் 10 அன்று ஒட்டுமொத்த நாடே வரவிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.