இந்தியா

ராமர் கோயில் விவகாரத்தில் கொள்ளையர்களுக்கு தண்டனை கோரி கையெழுத்து இயக்கம்: கேஜ்ரிவால் அறிவிப்பு

மோகன் கணபதி

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயிலில் காணிக்கை திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடு தழுவிய கையெழுத்து இயக்கத்தை ஆம் ஆத்மி கட்சி நடத்தப்போவதாக அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கேஜ்ரிவால், “அயோத்தி ராமர் கோயிலில் திருடி, கொள்ளையடித்து பெரும் பாவத்தில் ஈடுபட்ட நபர்கள் முழுமையாக பாதுகாக்கப்படுகிறார்கள். சனாதனத்துக்கு எதிரான இந்த குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டும். அங்கு மிகப்பெரிய நில மோசடிகள் நடந்துள்ளன. அதற்கு ஆதாரமான அனைத்து ஆவணங்களும் தயாராக உள்ளன. மோசடிகள் நடந்துள்ளதை ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ள போதிலும் அதற்கு எதிராக எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. யாரும் கைது செய்யப்படவில்லை.

கட்டுமான ஒப்பந்தங்கள் மற்றும் அதில் தொடர்புடைய நிறுவனங்கள் குறித்து தீவிரமான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள பொறியாளர்கள் 40% கமிஷன் கோரியதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், இது குறித்து எந்த விசாரணையும் இல்லை.

அயோத்தி ராமர் கோயில் காணிக்கைகள் பெருமளவில் திருடப்பட்டுள்ளன. பல சம்பவங்கள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளன. ஆனால், எந்த விசாரணையும் நடைபெறவில்லை. மாறாக, கீழ்மட்ட அளவில் எட்டு பேர் மட்டுமே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட முக்கிய புள்ளிகளைப் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கோடிக்கணக்கான பக்தர்கள் தங்கள் கடின உழைப்பால் ஈட்டிய பணத்தை கோயில் கட்டுவதற்காக அளித்தனர். இன்று அந்த நம்பிக்கை ஆழமாக சிதைக்கப்பட்டுள்ளது.

இந்த பெரும் பாவம் செய்தவர்கள் தண்டனை பெறுவதை உறுதி செய்வதில் தங்களை அர்ப்பணித்துக்கொள்வது ஒவ்வொரு இந்துவின் கடமை. இந்த குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர முயல்பவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் ராமரின் அருளைப் பெறுவார்கள்.

எனவே, இப்போது மக்கள் தங்கள் குரலை எழுப்ப வேண்டும். கடவுளை நாட வேண்டும். ஆகவே, வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு டெல்லி ரோஹினி பகுதியில் உள்ள ஜப்பான் பூங்காவில் சுந்தரகாண்ட பாராயணம் நடைபெறும். இதில், அனைத்து ராம பக்தர்களும் பெருமளவில் பங்குபெறுமாறு கேடடுக்கொள்கிறேன். ராமரின் ஆசீர்வாதத்தைப் பெற்ற பிறகு, ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்கள் நாடு முழுவதும் கையெழுத்து இயக்கத்தை தொடங்குவார்கள். இது ஆம் ஆத்மி கட்சிக்கானது மட்டுமல்ல. நடந்த சம்பவத்தால் வேதனைப்படும் ராம பக்தர்கள் அனைவரும் இந்த கையெழுத்து இயக்கத்தில் இணைய வேண்டும்.” என கேட்டுக்கொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT