இந்தியா

பஞ்சாப் | ஆம் ஆத்மி பிரமுகர் லக்கி ஓபராய் சுட்டுக் கொலை

வேட்டையன்

ஜலந்தர்: பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் லக்கி ஓபராய் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் உள்ள சாஹிப் குருத்வாராவுக்கு வெளியில் அரங்கேறியது.

சாஹிப் குருத்வாராவில் இன்று (பிப்.6) காலை வழிபாட்டை முடித்துக் கொண்டு வெளியில் வந்த லக்கி ஓபராய், தனது காரில் புறப்பட்டுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத இருவர் இருசக்கர வாகனத்தில் வந்து அவரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதில் அவரது உடலில் ஐந்து குண்டுகள் பாய்ந்தன. தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

          

மக்கள் கூட்டம் அதிகம் நிறைந்த நகர பகுதியில் இந்த கொலை நடந்துள்ளது. அந்த இடம் இப்போது போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. காவல் துறையினர் முதற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர். இதையடுத்து மாநிலத்தில் நிலவும் மோசமான சட்டம் ஒழுங்கை சுட்டிக்காட்டி ஆளும் ஆம் ஆத்மி அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

உயிரிழந்த லக்கி ஓபராயின் மனைவி ஆம் ஆத்மி சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். ஜலந்தர் கண்டோன்மெண்ட் தொகுதியின் ஆம் ஆத்மி பொறுப்பாளர் ராஜ்விந்தர் கவுருக்கு லக்கி ஓபராய் நெருக்கமானவர் என தகவல் வெளியாகி உள்ளது.

SCROLL FOR NEXT