ராகவ் சத்தா
புதுடெல்லி: ஆம் ஆத்மியை சேர்ந்த ராகவ் சத்தா உள்ளிட்ட 7 மாநிலங்களவை எம்பிக்கள் அண்மையில் பாஜகவில் இணைந்தனர். இது தொடர்பாக ராகவ் சத்தா சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:
நான் பாஜகவில் இணைந்ததற்காக சிலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நான் எதற்காக பாஜகவில் இணைந்தேன் என்று சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். நான் அரசியலில் இணைவதற்கு முன்பாக ஆடிட்டராக பணியாற்றி வந்தேன். அந்த துறையில் எனக்கு வளமான எதிர்காலம் காத்திருந்தது.
ஆனால் நான் எனது ஆடிட்டர் பணியைத் துறந்து அரசியலில் இணைந்தேன். ஆம் ஆத்மியின் நிறுவன தலைவர்களில் ஒருவராக பணியாற்றினேன். சுமார் 15 ஆண்டுகாலம் கட்சிக்காக ரத்தம், வியர்வை சிந்தி உழைத்தேன்.
ஆனால் தற்போது ஆம் ஆத்மியில் நச்சுத்தன்மை வாய்ந்த சூழல் நிலவுகிறது. என்னை பணியாற்றவிடாமல் தடுத்தனர். அதோடு நாடாளுமன்றத்தில் பேச விடாமலும் தடுத்தனர். சில ஊழல்வாதிகளின் கையில் ஆம் ஆத்மி சிக்கியிருக்கிறது.
இந்த கட்சி தற்போது மக்களுக்காக பாடுபடவில்லை. சிலரின் சொந்த நலனுக்காக மட்டுமே ஆம் ஆத்மி பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவேதான் பாஜகவில் இணைந்தேன்.இவ்வாறு ராகவ் சத்தா தெரிவித்துள்ளார்.