ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்

 
இந்தியா

தேர்தல் ஆணையத்தை நோக்கி இண்டியா கூட்டணி பேரணி: ஆம் ஆத்மி பங்கேற்கவில்லை

வேட்டையன்

புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, நாளை (அக்.6) தேர்தல் ஆணையத்தை நோக்கி இண்டியா கூட்டணி கட்சியினர் பேரணி செல்ல உள்ளனர். இந்நிலையில், இதில் ஆம் ஆத்மி பங்கேற்காது என்று அக்கட்சியின் எம்.பி சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

அவரது இந்த அறிவிப்பு அரசியல் ரீதியாக எதிர்க்கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இந்த முடிவு குறித்து சஞ்சய் சிங் விளக்கம் கொடுத்துள்ளார்.

“எங்கள் கட்சி சார்பில் அன்றாடமும் ஜந்தர் மந்தர் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டம் மேற்கொண்டு வருகிறோம். இந்த போராட்டத்தில் நாங்கள் எங்களது கட்சியின் பெயர் கொண்ட பதாகையை கூட பயன்படுத்துவது இல்லை. ஏனெனில், இது மக்கள் இயக்கம் என நம்புகிறோம்.

இது தேசத்தின் குடிமக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினை. அதனால் இதில் எல்லோரும் பங்கேற்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

தேர்தல் ஆணையத்தை நோக்கிய நாளையை பேரணி இண்டியா கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த கூட்டணியில் ஆம் ஆத்மி இல்லை. இந்த விவகாரத்தில் எங்கள் வழியில் நாங்கள் போராடி வருகிறோம். அதனால் அந்த பேரணியில் நாங்கள் பங்கேற்கவில்லை” என்று அவர் கூறினார்.

தேர்தல் ஆணைய விவகாரம் குறித்து கடந்த 30-ம் தேதி இண்டியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது: “அக்.6 அன்று எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரும் தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணியாகச் செல்வார்கள். அக்டோபர் இரண்டாவது வாரத்தில் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் முறையிடுவார்கள்.

எதிர்க்கட்சிகளால் 5 மெகா பேரணிகள் நடத்தப்படும். நவ.1 அன்று டெல்லியில் மிகப் பெரிய பேரணி நடத்தப்படும். சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் விரைந்து தீர்க்குமாறு இண்டியா கூட்டணி தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்” என அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT