புதுடெல்லி: மக்களால் அணுக முடியாத நிலைக்குச் செல்லும்போதுதான் ஒருவருக்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தேவைப்படுகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். மேலும், ஒவ்வொரு ஆண்டும் எதிர்க்கட்சிகளுக்கு புதிய அடைமொழி அளிப்பதாகவும் பிரதமர் மோடி மீது கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு நேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் நாடு பல்வேறு துறைகளில் பின்தங்கி இருந்ததாகக் குறிப்பிட்டு குற்றம் சாட்டினார். மேலும், எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் நக்ஸல் மனநிலையில் இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் உரைக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், “பிரதமர் மோடி அவர்களே, நேற்று நீங்கள் டெல்லி பல்கலைக்கழக எஸ்ஆர்சிசி கல்லூரிக்குச் சென்றீர்கள். இளைஞர்கள், கல்வி, அவர்களின் எதிர்காலம் ஆகியவை குறித்து பேசுவதற்கான ஒரு வாய்ப்பாக அது இருந்திருக்க வேண்டும்.
ஆனால், துரதிருஷ்டவசமாக இளைஞர்களின் கேள்விகளுக்கப் பதில் அளிப்பதற்குப் பதிலாக, அந்த உரை மற்றுமொரு அரசியல் பிரச்சாரமாக மாறிவிட்டது.
மோடியின் செயல்பாட்டு பாணி என்பது இதுதான்.
கேள்விகளை ஒடுக்குவதற்காகவும்,தங்கள் சொந்த தோல்விகளை மறைப்பதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் எதிர்க்கட்சிகளுக்கு புதிய அடைமொழியை சூட்டுவது.
கோபக்கார மாமா, நக்சல் மனநிலையில் இருப்பவர், நக்சல், கான் மார்க்கெட் கேங், உயிர்வாழ்வதற்காக போராட்டங்களில் பங்கேற்பவர், ஒட்டுண்ணி இப்படி அடைமொழிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகள் மாறுவதில்லை.
நீங்கள் எட்டாத தூரத்தில் இருக்கும்போதுதான் உங்களுக்கு மக்கள் சந்திப்பு தேவைப்படுகிறது. பிரதமர் மோடி தனது சாதனைகளை பட்டியலிட்டார். நாட்டின் இளைஞர்களும் அரசின் தோல்விகளை பட்டியலிடும் அட்டைகளுடன் எழுந்து நின்றார்கள்.
அவர்களின் பட்டியலில், வேலையின்மை, பல பத்தாண்டுகளாக முடங்கியுள்ள அரசுப் பணி, வினாத்தாள் கசிவு, உயர்ந்து வரும் கல்விச் செலவு, குறைந்து வரும் கல்வி உதவித்தொகை, பல்கலைக்கழகங்களின் தன்னாச்சிக்கு எதிராக அதிகரிக்கும் அழுத்தங்கள் போன்றவை உள்ளன.
மாணவர்களின் குரலைக் கேளுங்கள். சுற்றி வளைத்துப் பேசுவதால் தீர்வுகள் வராது.” என்று தெரிவித்துள்ளார்.