புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் சித்ரகூட் நகரில் முகலாயர் காலம் முதல் ஆண்டுதோறும் கழுதை சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் பாலிவுட் நடிகர்கள் அமிதாப்பச்சன், ஷாருக்கன் உள்ளிட்டோரின் பெயர்களுடன் அவை விற்கப்படுகின்றன.
உத்தரப்பிரதேசத்தின் புந்தேல்கண்ட் பகுதியில் மந்தாகினி நதி ஓடுகிறது. இதன் கரையில் அமைந்துள்ள சித்ரகூட் எனும் நகரில் பல நூற்றாண்டுகள் பழமையான கழுதைச் சந்தை உள்ளது. தீபாவளிக்கு மறுநாள் இந்த கழுதை சந்தை நடைபெறுவது வழக்கம். முகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் இருந்து இந்த சந்தை நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான சந்தை நேற்று நடைபெற்றது. உத்தரப் பிரதேசம் மட்டுமின்றி, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலிருந்து சுமார் 350 கழுதைகள் மற்றும் கோவேறு கழுதைகள் இந்த சந்தைக்குக் கொண்டு வரப்பட்டன.
விற்பனைக்கு வந்த கழுதைகளுக்கு காலத்திற்கு ஏற்றார்போல அரசியல்வாதிகள், நடிகர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் வைக்கப்படுகின்றன. இந்தவருடம், கழுதைகளுக்கு அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், சங்க்கி பாண்டே, மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களின் பெயர்கள் வைக்கப்பட்டிருந்தன.
காட்சிப்படுத்தப்பட்ட கழுதைகள், வியாபாரிகளால் ஏலம் விடப்பட்டன. இவற்றில், சங்க்கி பாண்டே என்ற கழுதை அதிகபட்சமாக ரூ.72,000-க்கு ஏலம் போய் உள்ளது. இந்த சந்தைக்கான ஏற்பாடுகளை சித்ரகுட் நகராட்சி நிர்வாகம் செய்திருந்தது.
சித்ரகூட் நகராட்சி மன்றத்தின் முதன்மை நகராட்சி அதிகாரி அங்கித் சோனி கூறுகையில், ‘இந்த ஆண்டு சுமார் 80 கழுதைகள் விற்பனை செய்யப்பட்டன. திரைப்பட நட்சத்திரங்களின் பெயர்கள் இந்தச் சந்தைக்குள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இந்த விலங்குகளுக்கும் அந்த பிரபலங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சந்தையில் ஒரு சுவாரஸ்யமான சூழலை உருவாக்கவே, இவ்வாறு திரைப்பட நட்சத்திரங்களின் பெயர்கள் வைக்கப்படுகின்றன.’ என தெரிவித்தார்.
மத்தியப் பிரதேசத்தின் வியாபாரிகளும் இங்கு வந்து பேரம் பேசி கழுதைகள் மற்றும் கோவேறு கழுதைகளை வாங்கிச் செல்கின்றனர். திரைப்பட நட்சத்திரங்களின் பெயர்கள் பார்வையாளர்களை ஈர்த்தாலும், அவற்றை வாங்குபவர்கள் அந்த விலங்கின் தரத்திற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
கழுதையின் இனம், அளவு, உடல் அமைப்பு மற்றும் வலிமை ஆகியவற்றைப் பொறுத்தே அதன் விலை தீர்மானிக்கப்படுகிறது.
இந்தச் சந்தை குறித்து அப்பகுதியில் ஒரு சுவையான வரலாறு கூறப்படுகிறது. அதன்படி, ஒரு போரின் போது முகலாயப் படையில் இருந்த விலங்குகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டன. எனவே, அந்த விலங்குகளை விற்பனை செய்வதற்காக இந்தச் சந்தை உருவானதாகக் கூறப்படுகிறது. பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வரும் இந்த சந்தையின் எதிர்காலம் நிச்சயமற்ற சூழலில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இளம் தலைமுறையினர் இதிலிருந்து விலகிச் செல்வதால், இந்தச் சந்தையின் ஈர்ப்பு படிப்படியாகக் குறைந்து வருவதாக ஏற்பாட்டாளர்கள் கருதுகின்றனர். முந்தைய வசீகரம் மங்கினாலும், ‘திரைப்பட நட்சத்திரங்களின்’ பெயர்களால் அதன் முக்கியத்துவம் தற்போது வரைத் தொடர்கிறது.