இந்தியா

உணவு மேற்பார்வையாளரின் மதம் தெரியாமல் நடந்த போராட்டம்: சிவசேனா எம்.பி.க்கள் விளக்கம்

செய்திப்பிரிவு

உணவு மேற்பார்வையாளரின் மதப் பின்னணி என்ன என்பது தெரியாமல் நடந்த ‘போராட்டம்’ அது என தங்கள் மீதான புகாருக்கு சிவசேனா எம்பிக்கள் புதன்கிழமை விளக்கம் அளித்துள்ளனர்.

இதுதொடர்பான புகாரில் சிக்கிய 11 எம்பிக்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ரவுத் கூறும்போது, “அன்று நடந்த சம்பவங்கள் அனைத்தும் போராட்டம் சம்பந்தப்பட்டவை. அதற்கு மதச்சாயம் பூச காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது.

எங்களுக்கு பறிமாறப்பட்ட உணவு தரம் குறைந்து காணப்பட்டதால், அதை தயாரித்த மேற்பார்வையாளருக்கு ஊட்ட முயற்சித்தோம். ஆனால் தான் ரமலான் விரதம் இருப்பதாகக் கூறியதும் அவரை விட்டு விட்டோம்” என்றார்.

சிவசேனா கட்சியின் மக்களவை எம்பி அனந்த்ராவ் அத்சுல் கூறும்போது, “எங்க ளுக்கு வழங்கப்பட்டது தரம் குறைந்த உணவு என்பதை உறுதிப்படுத்துவதற்காகவே அவரை ருசி பார்க்குமாறு கேட்டுக் கொண்டோம். அப்போது அவருடைய மதம் என்ன என்றே எங்களுக்கு தெரியாது” என விளக்கம் அளித்தார்.

மற்றொரு எம்.பி.யான ராஜன் விசாரே, இந்த சம்பவத்துக்கு மதச்சாயம் பூச முயலக்கூடாது எனக் கேட்டுக் கொண்டார்.

இந்த மூவருடன் சேர்த்து சிவசேனா கட்சியின் அர்விந்த் சாவந்த், ஹேமந்த் கோட்சே, கிர்பால் துமானே, ரவீந்திரா கெய்க்வாட், விநாயக் ராவுத், சிவாஜி அதல்ராவ் பாட்டீல், ராகுல் ஷேவாலே மற்றும் காந்த் ஷிண்டே ஆகிய மக்களவை உறுப்பினர்களும் புகாரில் சிக்கி உள்ளனர்.

கடந்த 17-ம் தேதி டெல்லியில் உள்ள மகாராஷ்டிர மாநில இல்லத்தில், ரம்ஜான் நோன்பு இருந்த ஒருவரை சிவசேனை கட்சி எம்.பி.க்கள் வற்புறுத்தி சாப்பிட வைத்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புதன்கிழமை அமளி ஏற்பட்டது. அத்துடன் பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் சிவசேனா எம்பிக்கள் மேற்கண்டவாறு விளக்கம் அளித்துள்ளனர்.

SCROLL FOR NEXT