ஜம்மு மாவட்டம் ஜஜ்ஜார் கோட்லி பாலம் அருகே நேற்று பள்ளத்தில் உருண்டு விழுந்த பேருந்தை கிரேன் மூலம் மீட்கும் மீட்புப் படையினர். இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். படம்: பிடிஐ 
இந்தியா

பிஹாரை சேர்ந்தவர்கள் புனித யாத்திரை சென்றபோது காஷ்மீரில் பஸ் கவிழ்ந்து 10 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பஸ் பள்ளத்தில் விழுந்து உருண்டதில் பிஹாரைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஜம்மு-நகர் தேசிய நெடுஞ்சாலையில் அமிர்தசரஸிலிருந்து கத்ரா நோக்கி நேற்று காலை ஒரு பஸ் சென்றது. ஜஜ்ஜார் கோட்லி அருகே உள்ள பாலத்தில் பஸ் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ்ஸில் பயணம் செய்த 10 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து ஜம்மு சிறப்பு போலீஸ் எஸ்.பி.சந்தன் கோலி கூறும்போது, “இந்த பஸ் அமிர்தசரஸிலிருந்து கத்ரா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஜஜ்ஜார் கோட்லி பாலம் அருகே பள்ளத்தில் உருண்டு விழுந்தது. பஸ்ஸில் சென்ற அனைவரும் வைஷ்ணவ தேவி கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.

பஸ்ஸில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலான பயணிகள் பயணித்ததாகத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்றார்.

இதுகுறித்து மீட்புப் பணியில் ஈடுபட்ட சிஆர்பிஎப் உதவி கமாண்டண்ட் அசோக் சவுத்ரி கூறும்போது, “சம்பவ இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், சிஆர்பிஎப் படையினரும் வரவழைக்கப்பட்டனர். அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த பஸ்ஸில் வந்தவர்கள் அனைவரும் பிஹாரைச் சேர்ந்தவர்கள். அனைவரும் புனித யாத்திரைக்கு வந்துள்ளனர்’’ என்றார்.

ஜம்மு மாவட்ட ஆட்சியர் அவ்னி லவாசா கூறும்போது, “விபத்தில் படுகாயமடைந்த 55 பேர் உயர் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ரூ.2 லட்சம் உதவி

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT